Aran Sei

அரசு அதிகாரத்தில் மோடியின் 20-வது ஆண்டு – பிரச்சாரமும் விமர்சனங்களும்

Image Credits: New Indian Express

பிரதமர் நரேந்திர மோடி 2001 முதல் 2014 வரை முதல்வராகவும் 2014 முதல் தற்போது வரை பிரதமராகவும் இருந்துவருகிறார். ஆட்சி அதிகாரத்தில் 20-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மோடி, தேசம் மற்றும் ஏழைகளின் நலன்தான் தனக்கு மிக முக்கியமானது என்பதை நாட்டு மக்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் தொடர்ச்சியாகப் பதிவிட்ட மோடி, மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவர்களின் ஆசீர்வாதங்களுக்கும் அன்பிற்கும் தகுதியுடையவராகத் தன்னை உருவாக்கத் தொடர்ந்து முயல்வதாகத் தெரிவித்துள்ளார்.

2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் மாநிலத்தின் முதல்வராகத் தனது பயணத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, 2002, 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று குஜராத் முதல்வராகப் பதவி வகித்தார். மோடியின் குஜராத் ஆட்சிக் காலதிதல் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மதக் கலவரங்களும், வன்முறைகளும் தொடர்பான வழக்குகள் குஜராத் நீதிமன்றங்களிலும், மும்பை உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் தொடர்ந்து நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் 2014 மக்களவை தேர்தலின்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு, பிரதமராகப் பதவியேற்றார். 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வென்று தொடர்ந்து பிரதமராக மோடி இருந்து வருகிறார்.

“தேசம் மற்றும் ஏழைகளின் நலன் எனக்கு மிக முக்கியமானது, எப்போதும் அந்த முக்கியத்துவம் அப்படியே இருக்கும் என்று நாட்டு மக்களுக்கு மீண்டும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன்,” என்று மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“எந்தவொரு நபரும் தனக்கு எந்தக் குறைபாடுகளும் இல்லை என்று கூற முடியாது. நீண்ட காலமாக, இது போன்ற முக்கியமான மற்றும் பொறுப்பான பதவிகளை வகிக்கும் நானும் ஒரு மனிதன் என்பதால், நானும் தவறுகளைச் செய்யக்கூடும்,” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

இந்த வரம்புகள் அனைத்தையும் மீறி, மக்கள் அவர்மீது அன்பு செலுத்துவது அவரது அதிர்ஷ்டம் என்று மோடி கூறியுள்ளார்.

“ஜனதா-ஜனார்தன் (பொது மக்கள்)” கடவுளின் ஒரு வடிவம், ஜனநாயகத்தில் அவர்கள் கடவுளைப் போலச் சக்திவாய்ந்தவர்கள், என்பது அவரது இளம் பருவத்திலேயே அவரிடம் பதிந்த ஒரு விஷயம் என்று மோடி தெரிவித்துள்ளார்.

“நீண்ட காலமாக, நாட்டு மக்களால் என்னிடம் ஒப்படைத்துள்ள பொறுப்புகளை நிறைவேற்ற உண்மையான மற்றும் அர்ப்பணிப்புடனான முயற்சிகளை நான் செய்துள்ளேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராகத் தனது 20-வது ஆண்டில் இடைவெளி இல்லாமல் நுழையும் மோடியையும் அவரது தலைமையையும் பாஜக தலைவர்கள் நேற்று பாராட்டியுள்ளனர்.

#20thyearofnamo என்ற ஹேஷ்டேகுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள த வயர் இணையதளம் “சென்ற ஆண்டு, நீங்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்று மோடி அரசு மறைத்த புள்ளிவிபரங்களில் அடித்துக் கொல்லப்படுதல், விவசாயிகள் தற்கொலைகள், ஜிடிபி வளர்ச்சி, வேலையின்மை, சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை அடங்கும்” என்று பட்டியலிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்