Aran Sei

விவசாயிகள் திட்டம் – உண்மையான விவசாயிகளுக்கு பயன் கிடைக்கவில்லை

Image Credits: புதிய தலைமுறை

நேற்று புதன்கிழமை பிரதம மந்திரி கிசான் திட்ட ஊழல் தொடர்பாக முக்கியக் கருத்தைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வெளியிட்டது. ஆயிரக்கணக்கான தகுதியில்லாதவர்களுக்கு முறைகேடாகப் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் உண்மையில் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய மானியம் கிடைக்கவில்லை எனவும் கூறி மத்திய மாநில அரசுகளுக்குத் தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு பிப்ரவரி 24-ம்  தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கான மானியம் வழங்கும் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. இதன் மூலம் நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் அமலாகும் என்று அறிவித்து விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்புவது தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில், துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தத் திட்டத்துக்கான இணையவழி விண்ணப்பத்தில் போலியாக பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் கணக்குகளை உருவாக்கி மோசடி செய்துள்ளனர். இதைச் செய்து கொடுக்கும் தரகர்களுக்கு ரூ. 2000 பணம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது

திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டையைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் தொடுத்த வழக்கை அடுத்து இந்த வழக்கு உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரிக்கப்பட்டது.

நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி தலைமையிலான அமர்வு, விவசாயிகளுக்கு என்று தனித்துவமான பல திட்டங்களை அரசுகள் வெளியிட்டாலும் அதனால் அவர்கள் முழுவதும் பயனடைவதில்லை எனவும், விவசாயத்தில் மட்டும்தான் உற்பத்தி செய்தவர்களால் விலை நிர்ணயம் செய்யமுடிவதில்லை எனவும் கூறியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அந்தத் திட்டங்களினால் பயனடைந்தவர்களின் விவரங்கள் ஆகியவற்றை வழங்குமாறு இந்திய விவசாயத் துறை அமைச்சகத்துக்கும், தமிழ்நாடு விவசாயத் துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிசான் திட்டம் உட்பட விவசாயத் திட்டங்களுக்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்றும், இந்த நிதி விவசாயிகளைச் சென்றடைந்துள்ளதை உறுதிப்படுத்த மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தக் கிசான் திட்ட மோசடியின் தற்போதைய நிலை என்ன என்றும், எத்தனை நபர்கள்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது

இந்த வழக்கு வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்