Aran Sei

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – 3 வாரம் பிணை  வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடாஷா நர்வாலின் தந்தை மகாவீர் நர்வால், கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து, நடாஷாவிற்கு 3 வாரங்கள் பிணை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனையில் நடாஷாவின் தந்தை மகாவீர் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவின் விசாரணையில், இன்று (மே 10) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் அனுப் ஜெயராம் பம்பானி அடங்கிய அமர்வு, “இந்தத் துயரமான, தனிமனித இழப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் நடாஷாவின் விடுதலை அவசியமானது” என தெரிவித்துள்ளனர்.

ஜெருசலேம் மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் – 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயம்

நடாஷாவின் ஜாமீனிற்கு காவல்துறை தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கபடவில்லை. இருப்பினும் வழக்கு தொடர்பாக நடாஷா, சமூக வலைதளங்களில் எந்த பதிவையும் இடக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக  டெல்லியில் போரட்டங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் தொடர்பிருப்பதாக கூறி, “கூண்டை உடை” (பிஜ்ரா தோட்) இயக்கத்தைத் தொடங்கியவர்களும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுமான நடாஷா நர்வால் மற்றும் தேவங்கனா கலீதாவை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் ஓராண்டாக நடாஷா சிறையில் உள்ளார்.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்