Aran Sei

போராடும் விவசாயிகளுக்கு வசதி செய்து தரக்கோரிய வழக்கு – மனுதாரரை கண்டித்து வழக்கு தள்ளுபடி

டெல்லியின் சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் - Image Credit : thehindu.com

டெல்லியின் எல்லையில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக பார் அண்ட் பெஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

நீதிபதிகள் டி.என்.படேல், ப்ரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது, “எங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், டெல்லிக்கு வெளியே தானே?” எனக் கேட்ட நீதிபதிகள், டெல்லி உயர் நீதிமன்றத்தின் விசாரணை எல்லை டெல்லிக்கு உள்ளே மட்டும் தான் உள்ளது என்று கூறியதாக பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. 

மேலும், பொதுநல வழக்கு அவசரமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி, “ இது பப்ளிக் இண்ட்ரெஸ்ட் (பொது நல) வழக்கா? அல்லது பப்ளிசிட்டி இண்டரெஸ்ட் (விளம்பர ஆசை) வழக்கா?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ரோஹித் ஜா, டெல்லியின் போராட்டங்கள் தேசிய தலைநகர் பகுதியை பாதிக்கும் என்றதற்கு,  “இது மத்திய அரசல்ல” என்ற நீதிபதிகள், விவசாயிகளின் பெரிய பிரச்சனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், இந்த பொது நல வழக்கை பஞ்சாப், ஹரியானா, அலகாபாத் மாநில நீதி மன்றங்களில் பதிவு செய்தால் உரிய பதில் கிடைக்கலாம் என தெரிவித்துள்ள நீதிபதிகள், முறையான குற்றச்சாட்டுகள் அல்லது கோரிக்கைகளோடு வேறு ஒரு மனுவை தாக்கல் செய்யலாம் எனக் கூறி இவ்வழக்கை தள்ளுபடி செய்தனர். 

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்