மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேரில் சென்று சந்தித்து தமிழக மக்களின் சார்பாக ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
போராட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் ராஜு உரையாற்றினார்.
“விவசாயிகள்தான் நமது நாடு. அவர்கள்தான் இந்த நாட்டின் வரலாறு. அவர்கள்தான் உண்மையான இந்திய தேசபக்தர்கள்.” என்று பேசிய அவர், “டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்தை இந்திய ஊடகங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. அவர்கள் மோடி அரசிற்கு ஆதரவாக இதனை செய்கின்றனர்.” என்று கருத்து தெரிவித்தார்.
“ஆனால் யாருக்கும் அஞ்சாமல் விவசாயிகள் போராடி தொடர்ந்து மோடி அரசுக்கு சவால் விடுகின்றனர். அவர்களின் உறுதியை மோடி அரசோ, ஆர்எஸ்எஸ் அமைப்பினராலோ குலைக்க முடியவில்லை. இந்த உறுதிக்கு தமிழக மக்களின் ஆதரவு எப்பொழுதும் உள்ளது” என்று அவர் பேசினார்.
“அனைத்து மக்களும் டெல்லி சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்ற பொருளில், அமைந்த “டெல்லி சலோ” என்ற பாடலை பாடி மக்கள் அதிகாரம் கலைக்குழுவினர் அங்கு திரண்டிருந்த மக்களை உற்சாகப்படுத்தினர்.
மக்கள் அதிகாரம் தோழர்கள் விவசாய போராட்டத்தை ஆதரித்து போராட்ட களத்தில் நின்றது போராடும் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க கூடியதாக இருந்தது. போராட்டக் களத்தில் தாய்த்தமிழ் கம்பீரமாக ஒலித்தது.
இந்தச் செய்தியை பஞ்சாப் மாநிலத்தின் முன்னணி ஊடகங்கள் தமது பத்திரிகைகளில் விரிவாக வெளியிட்டுள்ளனர்.
மோடி தலைமையிலான அரசு இயற்றியுள்ள விவசாய சட்டங்கள் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழக விவசாயிகளும் கருதுகின்றனர். அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் தஞ்சை உட்பட பல மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் டெல்லிக்குச் சென்று விவசாயிகளை நேரில் சந்தித்தது நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்துவதாக இருந்தது
– ஷியாம் சுந்தர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.