Aran Sei

ராணுவத்தினரின் ஓய்வூதியத்தைத் திருடும் மத்திய அரசு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

ராணுவ அதிகாரிகள் ஓய்வூதியத்தைத் திருட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

காங்கிரஸின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் “நரேந்திர மோடி அரசு ராணுவ அதிகாரிகளின் ஓய்வூதியத்தைத் திருட முயன்றதனால் ஆயுதப்படைவீரர்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது . அதன் போலி தேசியவாத முகமும் வெளிப்பட்டுவிட்டது ” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“20 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் விருப்ப ஓய்வு பெற விரும்பும் அதிகாரிகளின் ஓய்வூதியத் தொகையைக் குறைப்பதற்கான திட்டத்தைப்  பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“பிரதமர் மோடி முன்வந்து இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் .இம்முடிவைத் திரும்பப் பெற வேண்டும்” என்றும் ரன்தீப் சுர்ஜேவாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”20 ஆண்டுகள் கடுமையான சேவைக்குப் பிறகு ஒரு அதிகாரி, கடைசியாக ஈட்டிய சம்பளத்தில் 50விழுக்காட்டை  ஓய்வூதியமாகப் பெறுகிறார். ஆனால் அரசாங்கத்தின் புதிய திட்டம் இதில் 50% பறிக்கிறது.  ஒரு அதிகாரி பணி ஓய்வுக்கு முன் சம்பளமாக 1 லட்சம் பெற்றால். தற்போது, ​​அவருக்கு ரூ .50,000 ஓய்வூதியமாக கிடைக்கும், ஆனால் பாஜகவின் புதிய திட்டம் அதிகாரிக்கு  25,000 மட்டுமே தரும்” என்று அவர் கூறியுள்ளார்.

“இந்தத் தீபாவளி நேரத்தில் ராணுவ வீரர்களின் வாழ்வில் ஒளி ஏற்றாமல் இருளைப் பாய்ச்சுகிறார் மோடி” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் படைகளில் கழித்த அதிகாரிகளுக்கு மட்டுமே ‘முழு ஓய்வூதியம்’ வழங்கும் புதிய திட்டம் ஆயுதப்படை வீரர்களை  மனச்சோர்வடையச் செய்யும்.  90% இராணுவ அதிகாரிகள் 35 ஆண்டு சேவைக்கு முன்னர் ஓய்வு பெறுகிறார்கள், இந்த நடவடிக்கை 90% இராணுவ அதிகாரிகளின் முழு ஓய்வூதியத்தையும் மறுப்பதற்கான ஒரு ‘சதி’ ” என்று காங்கிரஸின் தலைமைச் செய்தி தொடர்பாளர்  ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்