Aran Sei

மெகபூபா முப்தியின் கட்சியிலிருந்து விலகிய பிரமுகர்கள் – கரணம் என்ன?

Image Credits: The Print

முன்னாள் மாநிலங்களவை அமைச்சர் டி.எஸ்.பஜ்வா உட்பட, மக்கள் ஜனநாயகக் கட்சியின் 3 தலைமை உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகியுள்ளனர். கட்சித் தலைவர் மெஹபூபா முப்தியின் “வெறுப்புவாத பேச்சு”, குறிப்பாக அவரின் “தேச உணர்வுகளை புண்படுத்தும்” கருத்துகளின் காரணமாக இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அறிவித்தது. அதற்கு முதல் நாள் பாதுகாப்பு நடவடிக்கையாக மெஹ்பூபா முப்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். விடுதலைக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று முதல்முறையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய மெஹ்பூபா முஃப்தி, “ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தும் கொடியும் மீண்டும் வழங்கப்பட்டால் அந்தக் கொடியை (இந்திய தேசியக்கொடியையும்) ஏந்துவேன்” என்று கூறினார்.

“எங்கள் சொந்தக் கொடி திரும்பக் கிடைக்கும் வரை வேறு எந்தக் கொடியையும் நான் ஏற்ற மாட்டேன், இந்தக் கொடிதான் அந்தக் கொடியுடனான எங்கள் உறவை உருவாக்கியது.” எனத் தெரிவித்திருந்தார். அவர் இக்கருத்துகளை தெரிவித்த பின் சிலர்  கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர் .

டி.எஸ்.பஜ்வா, வேத் மகாஜன் மற்றும் முன்னாள் மாநில செயலாளர் ஹுசைன் அலி வாஃபா ஆகியோர் மெஹபூபா முப்திக்கு எழுதிய இரண்டு பக்க கடிதத்தில், “உங்களது சில நடவடிக்கைகளும், வெறுப்புவாத பேச்சும் – குறிப்பாகத் தேச உணர்வுகளை புண்படுத்தும் கருத்துக்களும் எங்களை சங்கட படுத்திகிறது,” என்று கூறியுள்ளனர்.

பல விரும்பத் தகாத விடயங்கள் நடைபெற்ற போதிலும், “நாங்கள் கட்சியுடனும், தலைமையுடனும் ஆதரவாக நின்றோம்,” என்று இந்தத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பரந்த ஆலோசனைகள் மற்றும் நம்பிக்கையின் மூலம் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சவால்களை சமாளிப்பதற்கு பதிலாக, சில உறுப்பினர்களே மக்கள் ஜனநாயகக் கட்சியையும் அதன் தலைமையையும் வேறு வழியில் கொண்டு செல்கின்றனர். அவ்வழி கட்சியின் அடிப்படைக் கொள்கை, நோக்கம் மற்றும் தத்துவத்திலிருந்து விலகி உள்ளது. ஆகையால் இது தெளிவான முடிவுகளை எடுக்க இடையூறாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

“கட்சியின் சில நடவடிக்கைகளும் சொற்களும் மக்களால் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத ஒன்றாகும். ஆகையால், மக்களிடையே ஒரு அரசியல் மாற்றாக முன்னிறுத்தி கொள்வது கட்சிக்குச் சிக்கலாக உள்ளது. இந்நிலையில், கட்சிக்குள் நாங்கள் சங்கடத்தையும், எங்கள் குரல்வலைகள் நசுக்கப்படுவதையும் உணர்கிறோம். இது எங்களை கட்சியை விட்டு விலகும் கடினமான முடிவை எடுப்பதற்கு தள்ளி உள்ளது,” என்று அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மக்கள் ஜனநாயக கட்சியின் உருவாக்கத்தை பற்றி எழுதியுள்ள அவர்கள், “முன்னர் இக்கட்சி, இந்திய விரோத சக்திகளின் வலையில் விழுவதிலிருந்து மக்களையும் இளைஞர்களையும் பாதுகாத்து, மாநிலத்தின் அணைத்து பிரந்தியங்களின் குரல்களையும்” கேட்டதாகவும், தெரிவித்துள்ளனர்.

தற்போது வெளியேறியுள்ள மூன்று தலைவர்களும்,  “காங்கிரசுடனான முந்தைய கூட்டணிகளின் பொது, அமைதியையும் நல்லிணக்கத்தையும் மீட்டெடுத்து, சமமான அரசியல் பங்கையும் உறுதிப்படுத்த முடிந்தது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

2014-ம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீரில் ஆளுநரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது, அதன் முன்னாள் தலைவர் முப்தி முகமது சயீத், பாஜகவுடன் கைகோர்க்கும் முடிவை எடுத்தார். ஆகையால், வெவேறு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட காட்சிகள் கூட்டணியில் இணைந்தனர்.

“அத்தகைய முடிவின் சிரமங்களை அவர் அறிந்திருந்தாலும், ஒரு நல்ல எதிர்காலம் மற்றும் இந்தியாவில் உள்ள மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர் இந்த முடிவை எடுத்தார். அவர் சவாலைப் புதிய வாய்ப்புகளாக மாற்ற முயற்சித்தார்,” என்று அவர்கள் எழுதியுள்ளனர்.

இருப்பினும், எதிர்பார்த்த வகையில் எதுவும் நடைபெறவில்லை, முப்தி முகமது சயீத்தின் அகால மரணம் காரணமாக முழு செயல்முறையும் தடம் புரண்டது என்று அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அப்பிராந்தியத்தில் உள்ள பாஜக தலைவர்கள், மெஹபூபாவின் பேச்சை “தேசத் துரோகம்” என்று கூறி, உடனடியாக அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, “ஆளுநர் மனோஜ் சின்ஹா, உடனடியாக மெஹபூபா முப்தியின் மீது தேசத்துரோக வழக்கைப் பதிவுசெய்து சிறையில் அடைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“எங்கள் தேசிய கொடி, தேசம் மற்றும் தாய்நாட்டிற்காக எங்கள் இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் நாங்கள் தியாகம் செய்வோம். ஜம்மு காஷ்மீர் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும், எனவே ஜம்மு காஷ்மீரில் ஒரே ஒரு கொடியை மட்டுமே ஏற்ற முடியும், அது நம் தேசியக் கொடி,” என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த மெஹ்பூபா முப்தி “இந்தியாவின் மூவர்ணக் கொடி பன்முகத்தன்மையையும் அமைதியான முறையில் ஒன்றுபட்டு வாழ்வதையும் குறிக்கிறது. தேசியக் கொடியை யாராவது அவமதித்துள்ளார்கள் என்றால் அது பாஜகவினர் மட்டுமே,” என்று தெரிவித்துள்ளார்.

”பாஜகவினர்தான் சிறுபான்மையினரைத் துன்புறுத்தி, மக்களிடம் பிரிவினையையும் வெறுப்பையும் விதைக்கிறார்கள். 9 வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்த குற்றவாளிகளை நியாயப்படுத்த, பாஜக தலைவர்கள் இந்திய தேசியக் கொடியை உயர்த்தியபோதே கொடிக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது.” என்றும் மெஹ்பூபா முஃப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்