Aran Sei

நசுக்கப்படுகிறதா என்.ஜி.ஓக்கள் – மத்திய அரசின் புதிய சட்டம்

ரசு சாரா அமைப்புகளுக்கான வெளிநாட்டு நிதியுதவிகள் தொடர்பான Foreign Contribution (Regulation) Amendment Bill 2020, (FCRA) என அழைக்கப்படும்  சட்ட மசோதாவை, ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் தாக்கல் செய்தார். இம்மசோதாவை திங்கள் அன்று மக்களவை நிறைவேற்றியது

இது அரசு சாரா அமைப்புகளுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராக இருப்பதாகவும், மாற்று கருத்து உள்ளோரை ஒழிக்கும் விதமாக உள்ளதாகவும் எதிர்கட்சிகளும், அரசு சாரா அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தச் சட்டத்தில், ‘ஒவ்வொரு அரசு சாரா அமைப்பும் வெளிநாட்டு நிதியை பெற, அந்த அமைப்பின் தலைவரோ, இயக்குனரோ தங்கள் ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தங்கள் நிர்வாக ரீதியிலான செலவில் அதிகப்பட்சமாக 20 சதவீதமே வெளிநாட்டு நிதியில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.’ என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் (நன்றி : The Print)

இச்சட்டத்தை பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், “ நாட்டில் உள்ள அரசு சாரா அமைப்புகளுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் வெளிநாட்டு நிதியாக வருவதை, எவ்வித ஒளிவுமறைவும் இன்றி கணக்கு வைக்க இந்தச் சட்டம் உதவும். இது அரசு சாரா அமைப்புகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான சட்டம் இல்லை.” என்றார்.

இச்சட்டத்தை குறித்து காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகொய், “இந்த சட்டம் அரசியல் ரீதியிலான கருத்து வேறுபாடுகளை நசுக்கும். அவசர அவசரமாக இச்சட்டத்தை இயற்றுவதை கைவிட்டு, நாட்டில் உள்ள என்.ஜி.ஓக்களிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட வேண்டும்.” என்று கூறினார்.

“முன்பு 50 சதவீதமாக இருந்த அமைப்புகளின் நிர்வாக ரீதியிலான செலவை 20 சதவீதமாக குறைப்பது, பல என்.ஜி.ஓக்களை இழுத்து மூடச் செய்யும்” என்றார்.

நன்றி : Capindia.in

இச்சட்டம் குறித்து, வாலண்டரி ஆக்‌ஷன் நெட்வொர்க் இந்தியா என்ற கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”இப்போது இந்தியாவில் நிலவும் கொரோனா நோய் காலத்தில், சர்வதேச நிதியுதவிகளை ஊக்கவிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யாமல், இந்த சட்டத்தை அமல்படுத்தி அரசு சாரா அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதியை தடுப்பதற்கான வேலையைச் செய்கிறது. நிர்வாக ரீதியிலான செலவை 20 சதவீதமாக குறைப்பது என்.ஜி.ஓக்களுக்கு பெரிய அடியாகவுள்ளது.” என்று கூறுகிறது.

இதுகுறித்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றி செல்வனிடம் அரண் செய் பேசிய போது, “அரசு சாரா அமைப்புகள் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டு இயங்கும் அமைப்புகள் தான். இவ்வகை அமைப்புகள் தொடங்கப்பட்டதன் நோக்கமே, அரசின் செயற்பாடுகள் நாட்டின் எல்லா மட்டத்திற்கு போய் சேர வேண்டும் என்பது தான். 130 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அதுவும் ஒரு அரசு சாரா அமைப்பு தான்” என்று கூறினார்.

“மத்திய அரசு என்.ஜி.ஓக்களை இரண்டு விதமாக அனுகுகிறது. ஒன்று மத்திய அரசுக்கு உதவி செய்யும்  இந்தியாவின் மிகப்பெரிய என்.ஜி.ஓவான ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத என்.ஜி.ஓக்களை அது சட்டை செய்வதில்லை. ஆனால் மாற்றுக்கருத்து கொண்டு, மக்களுக்காக இயங்கும் என்.ஜி.ஓக்களை அழிக்கப் பார்க்கிறது. ஒட்டு மொத்தமாக இந்திய ஜனநாயகத்தை அழித்து, மதவாதத்தை பரப்ப முயலும் அரசின் செயல் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்தச் சட்டம்” என்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்