Aran Sei

25 மசோதாக்கள் நிறைவேற்றம்: முடிவுக்கு வந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்

credits: business-standard.com

ழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுக்கு வருவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

நடப்பாண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கப்பட்டு பத்து நாட்களாக நடைபெற்று வந்தது. 18 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த இந்தக் கூட்டதொடர் அக்டோபர் 1-ம் தேதி நிறைவடைய இருந்தது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் சமூக விலகலைக் கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன.

நாடாளுமன்றத்தின் பணியாளர்கள், பத்திரிக்கையாளார்கள், உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்ட பிறகே  அனுமதிக்கப்பட்டனர்.

மக்களவை காலை 9 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 3 மணிக்குமாக இரு அவைகளும் இருவேறு நேரத்தில் செயல்பட்டு வந்தன.

கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட பிறகு மத்திய அமைச்சர்கள்  நிதின் கட்காரி, பிரகலாத் படேல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை புறக்கணித்து விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் அமைதிப் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே, கொரோனா சூழலால் இரு அவை உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி கூட்டத்தொடரை திட்டமிட்ட தேதிக்கு முன்னரே முடிப்பதாக நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் பேசிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், ”இன்றுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைகிறது. இதுவரை இல்லாத வகையில் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக ஆறு வெவ்வேறு இடங்களில் கூட்டத்தொடர் நடைபெற்றது” என்றார்.

“வார இறுதி விடுமுறை கூட இல்லாமல் தொடர்ச்சியாக அமர்வுகள் இருப்பது இதுவே முதல்முறை. இந்த 10 நாட்களில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு இந்த பத்து நாட்களில் 1567 கேள்விகளுக்கு எழுத்து ரீதியாக பதிலளித்துள்ளது.” எனவும் கூறினார்.

தொடர்ந்து ”முதல்முறையாக துணை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. சரியான விதிமுறையைப் பின்பற்றி அளிக்கப்படாததால் அது நிராகரிப்பட்டது. அவையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு ஆனால் அது முறைப்படி இருக்க வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, “சர்வாதிகார பா.ஜ.க அரசு எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த அநீதியை வங்காள மக்கள் நினைவில் கொள்வார்கள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்