Aran Sei

கொரோனா காலத்தில் கூடும் நாடாளுமன்றம் – விவாதிக்கப்படும் பிரச்சினைகள்

Indian Parliament

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இன்று துவங்கியது. வார இறுதி நாட்கள் உட்பட தொடர்ச்சியாக நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி நிறைவுபெறுகிறது.

இந்திய சீன எல்லை பிரச்சன, கொரோனா பேரிடர், தில்லி கலவரத்தில் இடதுசாரி தலைவர்களை தொடர்புபடுத்தியது போன்றவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கேள்விக்குள்ளாக்கும் என எதிர்பார்ப்பதாக தி ஹிந்து நாளிதழ் கூறுகிறது.

இந்திய சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ”அரசு எல்லா பிரச்சனை குறித்தும் விவாதிக்க தயாரக உள்ளது” எனவும் “அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

அவை நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்க நேற்று மாலை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடியது. அலுவல் ஆய்வுக்குழுவில் காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த டெரிக் ஓ’ பிரையன், தி.மு.க.வின் திருச்சி சிவா, பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த சஸ்மித் பாத்ரா, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் ஆர்.சி.பி சிங், பா.ஜ.க.வின் புபேந்தர் யாதவ், சிவ பிரதாப் சுக்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தொடரின் முதல்நாள் நடைபெற உள்ள மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க-வின் ஹரிவன்ஷ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மனோஜ் ஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கொரோனா சூழலால் மக்களவை, மாநிலங்களவை கூட்டங்கள் நாளின் வெவ்வேறு நேரங்களில், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 3 மணி முதல் மாலை 7 மணி வரை ஆகிய நான்கு மணி நேர அமர்வுகளாக மாறி மாறி நடைபெறுகின்றன. இரு சபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, இருக்கைகள் சமூக இடைவெளி பின்பற்ற ஏதுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. முதன்முதலாக இரு அவைகளிலும் மற்ற அவையின் நடவடிக்கைகள் எல்.ஈ.டி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மக்களவை மண்டபத்தில் 257 உறுப்பினர்கள், பார்வையாளர் மாடத்தில் 172 உறுப்பினர்கள் எனவும் மாநிலங்களவை மண்டபத்தில் 60 உறுப்பினர்களும், பார்வையாளர்கள் மாடத்தில் 51 உறுப்பினர்களும் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

நடப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனைகள் குறித்த முக்கியமான கேள்விகளை முன்வைக்க அமைச்சர்களுக்கு 30 நிமிடம் நீடிக்கும் பூஜ்ஜிய நேரம் இருக்கும். கேள்விகளுக்கான எழுத்துப்பூர்வ பதில்கள் வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் 11 அவசர சட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. காங்கிரஸ் கட்சியும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த அகாலி தளமும் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ள மூன்று வேளாண்மை தொடர்பான அவசர சட்டங்களை நிறைவேற்றவும் 7 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் காணொலி காட்சி வழியாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்திய எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை என்று கூறுவதன் மூலம் பிரதமர் மோடி நமது நாட்டை பலவீனப்படுத்துகிறார். சீன எல்லைப் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும். வேளாண் துறை, வங்கித் துறை ஆகியவை பற்றிய அரசின் நிலைப்பாடுகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

வங்கி சீர்திருத்த மசோதாவுக்கும், வேளாண்மை தொடர்பான மூன்று மசோதாக்களுக்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளது எனவும் அவர் கூறியிருந்தார். கொரோனா பேரிடர், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்பு, வறுமை, விமான நிலையங்கள் தனியார்மயமாதல் ஆகியவை குறித்தும் காங்கிரஸ் கட்சி எழுப்ப உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் குறித்த மூன்று மசோதாக்களும் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது என அவர் கூறினார். கார்ப்பரேட் மற்றும் ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிப்பதானது விவசாயப் பொருட்கள் கொள்முதல், குறைந்தபட்ச விலை மற்றும் மாநில வருவாயினை பாதிப்பதோடு, உணவு பாதுகாப்பினையும் பாதிக்கும் எனவும் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.

வங்கி ஒழுங்குமுறை சட்டம் குறித்து, “கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் கீழ் செயல்பட வேண்டும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அவை வரக் கூடாது. இது குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டால் மையப்படுத்துதல் அதிகரிக்கும். காங்கிரஸ் கட்சி மையப்படுத்தலை எதிர்க்கிறது; மாநிலங்களை வலிமைப்படுத்துவதை ஆதரிக்கிறது” என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்