Aran Sei

விவசாயிகள் போராட்டம் : பத்ம விபூஷன் விருதைத் திருப்பித் தர முடிவு – பஞ்சாப் முன்னாள் முதல்வர்

Image Credits: The Indian Express

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் படல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தனது பத்ம விபூஷன் விருதைத் திருப்பித் தர விரும்புவதாகக் கூறியுள்ளார். தற்போது, 92 வயதாகும் பிரகாஷ் சிங், 2015 ஆம் ஆண்டில் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதைப் பெற்றார்.

முன்னதாக, பிரகாஷ் சிங்கின் ’ஷிரோமணி அகாலி தளம்’ கட்சி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. பின்னர், விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது.

“இந்திய அரசு, விவசாயிகளுக்கு இழைத்த துரோகத்தை எதிர்த்துப் பத்ம விபூஷன் விருதைத் திருப்பி அனுப்ப இக்கடிதத்தை எழுதுகிறேன். வேளாண் சட்டங்களை எதிர்த்து, அமைதியாக நடைபெறும் ஜனநாயக போராட்டத்தை அரசு அவமதித்து அலட்சியமாக நடத்துவதால் நான் எனது விருதைத் திருப்பிக் கொடுக்குறேன்”  எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்திய அரசு இந்த மசோதாக்களைக் கொண்டுவந்தபோது விவசாயிகளுக்கு இது குறித்து அச்சம் ஏற்பட்டது. ஆனால், விவசாயிகளின் கருத்தைக் கேட்டு அவர்கள் திருப்தி அடைந்தவுடன்தான் இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்படும் என்று அரசு உறுதி அளித்தது. அதன்படி, அரசின் வாக்குறுதியை நம்புமாறு நான் விவசாயிகளிடம் கோரிக்கை வைத்தேன். இருப்பினும், அரசு, கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியபோது நான் அதிர்ச்சி அடைந்தேன்” என்று பிரகாஷ் சிங் எழுதியுள்ளார்.

“எனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் இது மிகவும் வேதனையான மற்றும் சங்கடமான தருணமாக இருந்தது. அதன்பின், நான் அனுபவித்து வரும் மன அழுத்தத்தை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அரசு ஏன் இவ்வளவு இரக்கமற்றதாகவும், விவசாயிகளிடம் நன்றியற்றதாகவும் மாறிவிட்டது என்று நான் யோசிக்கத் துவங்கிவிட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் விவசாயிகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங்  “இன்று அதே விவசாயிதான் தனது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள போராடவேண்டி உள்ளது. இந்த மூன்று சட்டங்களும் ஏற்கனவே பல சிக்கல்களைச் சந்தித்துவந்த விவசாயிகளுக்கு மேலும் சுமையை அதிகரிக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

“சிறிதும் சிந்திக்காமல் பல கோடி ரூபாய் கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி செய்யும் அதே அரசுதான், விவசாய கடன்களுக்கு மானியம் வழங்கத் தயங்குகிறது” எனக் கடிதத்தில் அவர் கூறிப்பிட்டுள்ளார்.

மக்கள் குறிப்பாக விவசாயிகள் மீது கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாகத்தான் தனக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். “எனவே, தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக அதை திருப்பித் தருவதாக” தெரிவித்துள்ளார்.

“அமைதியாகப் போராடி வரும் விவசாயிகளை ‘தேச விரோதிகள்’ என்றும் ‘காலிஸ்தான் ஆதரவாளர்கள்’ (சீக்கியர்களுக்கான தனி மாநிலத்தைக் கோருபவர்கள்) என்றும் கூறும் பாஜக தலைவர்களின் நிலைப்பாட்டைக் கண்டு நான் வருந்துகிறேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.

பஞ்சாபில், அரசால்  வழங்கப்பட்ட விருதுகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் மாதம் 5-ம் தேதி டெல்லிக்கு அணிவகுத்து செல்ல விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் தயாராக இருக்கிறார்கள் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்