Aran Sei

கறுப்புச் சட்டத்தை எதிர்த்து 3 மாதங்களாக உண்ணாவிரதம் இருக்கும் பாலஸ்தீனப் போராளி

ஸ்ரேலின் சட்டத்திற்குப் புறம்பான கைது நடவடிக்கையை எதிர்த்து கடந்த 88 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் பாலஸ்தீனர், மரணத்தின் விளிம்பில் இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நிர்வாகத் தடுப்புக்காவல் என்ற பெயரில் இஸ்ரேல் அரசு யாரையும் விசாரணையின்றி ஆண்டுக்கணக்கில் கூட சிறையில் வைக்க முடியும்.

பாலஸ்தீனத்தின் கிழக்குக் கரையைச் சேர்ந்த மஹேர் அல் அக்ராஸ் என்பவர் கடந்த ஜுலை மாதம் முதல் இஸ்ரேலின் நிர்வாகத் தடுப்புக் காவலில் உள்ளார். இதை எதிர்த்து அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

ஆகஸ்ட் மாதம் வரை சுமர் 350 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் நிர்வாகத் தடுப்புக் காவலில் இருப்பதாக இஸ்ரேலைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான பிசெலேம் தெரிவித்துள்ளது.

மஹேர் அல் அக்ராஸ் இஸ்ரேலை அழிக்க நினைக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், அவருடைய செயல்பாட்டிற்காக ஏற்கனவே ஐந்துமுறை கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், மஹேர் இதை மறுத்துள்ளார்.

தற்போது மருத்துவனையில் உள்ள மஹேரின் உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும் அவர் விரைவில் மரணமடைவார் என்று இஸ்ரேல் மருத்துவர்கள் கூறியதாக மஹேரின் மகள் தெரிவித்துள்ளார்.

“அவருடைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் மிகுந்த வலியில் உள்ளார்” என்றும் “தன்னை பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினால்தான் உண்ணாவிரதத்தைக் கைவிடுவேன் என்று அவர் கூறுகிறார். ஆனால் இஸ்ரேல் அதற்கு சம்மதிக்க மறுக்கிறது. விடுதலை மட்டுமே அவருடைய உயிரைக் காப்பாற்றும்” என்று அவருடைய மகள் கூறியுள்ளார்.

மஹேரை விடுதலை செய்ய இஸ்ரேல் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. ஆனால், அவரை நவம்பருக்கு மேல் தடுப்புக் காவலில் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் மஹேர் தன்னுடைய உண்ணாரவிரதப் போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளார்.

மஹேர் தெளிவான மனநிலையில் உள்ளதாகவும், அவருடைய கை, கால்கள் அசைக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரைச் சந்தித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள மஹேர் மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகளும், இஸ்ரேலைச் சேர்ந்த மருத்துவர்கள் அமைப்பும் மஹேரை விடுதலை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளன. மஹேர் எந்த நேரத்திலும் உயிரிழக்கலாம் என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹேரைச் சமாதானப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும், அவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என்றும், பாலஸ்தீன சிறைக் கைதிகளின் உரிமைக்கான இஸ்ரேலியக் குழுவைச் சேர்ந்தவரும் டெல் அவிவ் பல்கலைக்கழகப் பேராசிரியருமான அனால் மதார் கூறியுள்ளார்.

“அவருடைய கொள்கை உறுதி மிக்கப் போராட்டத்தை நாங்களும் அவருடைய குடும்பத்தினரும் ஆதரிக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல. விசாரணையற்ற தடுப்புக் காவலை எதிர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தன்னுடைய வழக்கின் மூலம் இதற்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்று மஹேர் நினைக்கிறார். அதற்காக அவர் தன்னுடைய உயிரையே பணயம் வைத்துள்ளார்” என்று அனால் மதார் தெரிவித்துள்ளார்.

நன்றி : The Guardian

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்