Aran Sei

பஞ்சாப் விவசாய மசோதாக்கள் நிறைவேறின – புறக்கணித்த பாஜகவுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

நேற்று (அக்டோபர் 20) நடந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தை, பாஜக எம்எல்ஏக்கள் புறக்கணித்தது அரசியல் கோழைத்தனம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று நடந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாயச் சட்டங்களை முறியடிக்கும் விதமாக மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கடந்த மாதம், மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகளும் விவசாயிகளின் அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று கூறி பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மாநில சட்டப் பேரவையில் நான்கு மசோதாக்களை முன் மொழிந்தார். அதில் மின்சாரச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு எதிராக முன் மொழியப்பட்ட மசோதாவும் அடக்கம்.

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்கள் 

  1. விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பஞ்சாப் திருத்த மசோதா 2020
  2. விலை உறுதி மற்றும் சேவைகள் தொடர்பான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் (சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பஞ்சாப் திருத்த மசோதா 2020)
  3. அத்தியாவசியப் பொருட்கள் மசோதா (சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பஞ்சாப் திருத்த மசோதா 2020)

குறைந்தபட்ச ஆதரவு விலையில் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வது விவசாயிகளின் சட்டரீதியான உரிமை என்றும் இந்தக் கொள்முதலைச் சாத்தியப்படுத்த இந்திய அரசு, இந்திய உணவுக் கழகம் போன்ற இதர நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது.

மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே விவசாயப் பொருட்களான கோதுமை, நெல் போன்றவற்றை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குவதற்கு இம்மசோதா வழி செய்கிறது.

முதல்வர் அமரீந்தர் சிங், சட்டப்பேரவையில் மூன்று மசோதாக்களையும் அறிமுகம் செய்து பேசினார். அப்போது, எதிர்க்கட்சியான பாஜக சட்டசபை உறுப்பினர்கள் இருவரும் சட்டப்பேரவையில் இல்லை. பேரவைக்கு வராமல் புறக்கணித்தனர்.

பாஜகவின் தேசிய ஜனநாயக்கூட்டணியிலிருந்து வெளியேறிய சிரோன்மணி அகாலி தளம், ஆம் ஆத்மி, லோக் இன்சாப் ஆகிய கட்சிகளின் சட்டசபை உறுப்பினர்கள் அவையில் விவாதத்தில் பங்கேற்றதுடன், மசோதாக்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மசோதாக்கள் எதிர்ப்பின்றிப் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

 

சட்டசபைக்கு வெளியே பத்திரிகையாளர்களை முதல்வர் சந்தித்தார். ”விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் விவசாய சட்டத்தை முழுதாக எதிர்க்கிறோம். அதற்கு மாற்றான  மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளோம். மசோதாவின் நகலை ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம்” என்று முதலவர் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நகல்

“இதை முதலில் ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறோம். பின் ஜனாதிபதிக்குச் செல்லும். இதில் எதாவது பிரச்சனை என்றால், அதைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள எங்களுக்குத் தெரியும். ஒருமனதாக உருவாக்கப்பட்ட மசோதாவிற்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்குவார் என்று நினைக்கிறேன்.” என்றார்.

மேலும், வரும் நவம்பர் மாதம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தைச் சந்திக்க இருப்பதாகக் கூறிய முதல்வர், ”மொத்தச் சட்டசபையும் அவரைச் சந்திப்போம்” என்று கூறியதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக சட்டசபை உறுப்பினர்களின் செயலை விமர்சித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நன்றி : newindianexpress.com

“மத்திய அரசின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் அரசு சட்டப்பேரவை மசோதாக்களை அறிமுகம் செய்தபோது, பாஜக எம்எல்ஏக்கள் ஏன் பங்கேற்காமல் புறக்கணித்தனர் ?

மத்திய அரசின் விவசாயச் சட்டங்களையும் மத்திய அரசின் கொள்கைகளையும்  பாஜக எம்எல்ஏக்கள் ஆதரிப்பதாக இருந்தால், துணி்ச்சலாக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். விவாதத்தில் மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை ஆதரித்துப் பேசியிருக்க வேண்டும். பஞ்சாப் அரசு கொண்டுவந்த மசோதாக்களை எதிர்த்துப் பேசியிருக்க வேண்டும்.” என்று ப.சிதம்பரம் விமர்சித்திருக்கிறார்.

“சட்டப்பேரவைக்கு பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தது பற்றி வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால், இது அரசியல் கோழைத்தனம்.” என்று சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்