Aran Sei

’எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்’: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

credits: Nationalheraldindia.com

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்ற இரு அவைகளையும் புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

ஞாயிறு அன்று மாநிலங்களவையில் மத்திய அரசு வேளாண் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக சட்டம், பண்ணை ஒப்பந்த சட்டம் ஆகியவற்றை தாக்கல் செய்தது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மசோதாக்களுக்கு டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், நிலைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரினர்.

மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் கோரிக்கைகளை நிராகரித்து குரல் ஓட்டெடுப்பு நடத்தி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

எம்.பி.க்கள் டெரிக்.ஓ.பிரையன், குலாம் நபி ஆசாத், திருச்சி சிவா உள்ளிட்டோர் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து அவையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு முழுக்கங்கள் எழுப்பினார்கள்.

அவை நடவடிக்கைகளை மீறி செயல்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கயா நாயுடு 8 எம்.பி.க்களை ஒரு வாரம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், காங்கிரசின் ராஜீவ் சதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.கே.ரகேஷ் உள்ளிட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று அவையில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் குலாம் நபி ஆசாத், எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழ் தனியார் விளைபொருட்களை கொள்முதல் செய்ய முடியாது என புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எதிர்க்கட்சிகள் அவையைப் புறக்கணிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். தொடர்ந்து, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினார்கள்.

மக்களவையிலும் இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளையும் புறக்கணிக்க முடிவு செய்ததை அடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட 8 மாநிலங்களவை எம்.பி.க்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “எம்.பி.க்களின் அத்துமீறலுக்கு அவர்கள் ஒரு ஆண்டு வரை இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற நடத்தை நீடித்தால் பதவிக்காலம் முழுக்க பணியிடை நீக்கம் செய்ய முடிவது போல சட்டம் இயற்றப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எம்.பி. டெரிக் ஓ பிரையன் “நீங்கள் என்னை இடைநீக்கம் செய்யலாம் ஆனால் நான் பேசுவதை உங்களால் தடுக்க முடியாது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவையை புறக்கணித்துள்ள உறுப்பினர்கள் இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்திக்க இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்