Aran Sei

நண்பர்களை பாதுகாத்த ஜாமியா பல்கலைக்கழக மாணவிகள் – தற்போது என்ன செய்கிறார்கள்?

2019 டிசம்பர் 15 அன்று, இந்தியா முழுக்கக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த போது, ஒரு வீடியோ வைரலானது.

டெல்லியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், ஒரு வீட்டின் சுற்றுச்சுவருக்குள் இருந்து ஒரு நபரைக் காவல்துறையினர் வெளியே கொண்டு வர முயற்சிப்பதையும், ஐந்து பெண்கள் காவல்துறையினரை நோக்கிச் சத்தம் போடுவதையும் பார்க்க முடிந்தது.

வீட்டிற்குள் போக அந்நபர் முயற்சித்ததும், காவல்துறையினர் அவரை இழுத்து, சாலையில் தள்ளி கொடூரமாக அடித்தனர். அப்போது, அந்த ஐந்து பெண்களும் அந்நபரைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் போல நின்று, பக்கத்தில் வரக் கூடாது எனக் காவல்துறையினரை எச்சரித்தனர். அதன் பிறகு, காவல்துறையினர் பின் வாங்கினர்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்று காவல்துறை அதீத வன்முறையில் ஈடுபட்ட இடமான டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்களே வீடியோவில் நாம் காணும் ஐந்து பெண்கள் – சந்தா யாதவ், அயிஷா ரென்னா, ஃபாதிமா தஸ்னீம், லதீதா ஃபர்ஸானா மற்றும் அக்தரிஸ்தா அன்சாரி.

வீடியோ வைரலான பிறகு, இவர்கள் ஐந்து பேரும் பாராட்டப்பட்டார்கள். சிலர் நாடு முழுதும் பயணித்து, இந்தியக் குடியுரிமைச் சட்டம் வழியாக மத வேறுபாடு நாட்டில் விதைக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்களில் உரையாற்றினார்கள். சமூக வலைத்தளங்களில் இவர்களை வைத்து மீம்கள் உருவாக்கப்பட்டன.

இந்த நிகழ்வு நடந்து ஓராண்டு கடந்திருக்கும் நிலையில், ஐந்து பெண்களிடமும் பேசியது scroll.in.

சந்தா யாதவ்

2019 டிசம்பரிலும் ஜனவரியிலும், வீடியோ வைரலான பிறகு, 21 வயதான சந்தா யாதவ் பீஹாரில் இருக்கும் அராரியா, சமஸ்துபூர் மற்றும் பாட்னாவிற்கும், மஹாராஷ்டிராவின் லதூர் மாவட்டத்தில் இருக்கும் உட்கிர் பகுதிக்கும், மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் போபாலிற்கும் பயணித்துப் பல போராட்டக் களங்களில் உரையாற்றினார்.

பிப்ரவரி மாதம் வட கிழக்கு டெல்லிக் கலவரத்தில் 53 பேர் கொலை செய்யப்பட்டு, பலர் காயமடைந்து, மக்கள் தங்கள் வீடுகளீல் இருந்து வெளியேற்றப்பட்ட போது, முஸ்தாஃபாத்தில் இருக்கும் ஈட்காவின் நிவாரண முகாமில் தன்னார்வலராகக் கலந்து கொண்டார்.

“சிலர் தங்கள் பெண்களுக்குத் திருமணம் நடக்கவிருந்ததாகவும், அதற்கு வைத்திருந்த பணம் மற்றும் நகை திருடப்பட்டதாகவும் சொன்னார்கள். சிலருக்குத் துணிகளோ மருந்துகளோ கூட இல்லை. நாட்டின் தலைநகரின் இது நடக்கிறது. எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள் என்பது விநோதமாக இருந்தது. இந்தியாவில் மற்ற பகுதிகளின் நிலை எப்படியிருக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என்று சொன்னார்.

சில நாட்களிலேயே கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க நாடு முழுவதும் முழு அடைப்பு அமலுக்கு வந்தது.

திடீரென அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பும், அதற்கு முன் நடந்த வன்முறையும் சந்தாவிற்குக் கனவாக திரும்பத் திரும்ப வந்ததாகச் சொல்கிறார், “நான் கேன்டீனில் எங்கேயோ உட்கார்ந்து கொண்டு நண்பர்களோடு டீ குடித்துக்கொண்டிருக்கிறேன், திடீரெனக் காவல்துறையினர் வந்து எங்களை அடிக்கிறார்கள் என்பது போலவோ அல்லது நான் ஒரு போராட்டக்களத்தில் இருக்கும் போது காவல்துறையினர் எங்களை அடிப்பது போலவோ ஒரு கனவு” என அந்தக் கனவை விவரிக்கிறார்.

முழு அடைப்பின் போது, ஆசிஃப் இக்பல் தன்ஹா, சஃபூரா ஸர்கர், மீரன் ஹைதர் மற்றும் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஷிஃபா-உர்-ரெஹ்மான் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். நரேந்திர மோடி அரசை அவமரியாதை செய்யச் சில மாணவர்கள் சதித்திட்டம் தீட்டியதுதான் டெல்லிக் கலவரங்களுக்குக் காரணம் என்று போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. “ ‘துரோகிகள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்’ என்று சொன்ன கபில் மிஸ்ராவுக்கு எதிராக வழக்கு இல்லை. ஆனால் மீரன் ஹைதர், ஆசிஃப் இக்பல் மற்றும் சஃபூரா ஸர்கர் கைது செய்யப்பட்டார்கள்” என்றார் யாதவ்.

“எந்த அடிப்படையுமே இல்லாமல் இப்படி கைது செய்கிறார்கள். போலியாகச் சதித்திட்டம் என்று சொல்லிக் கைது செய்தால் மக்கள் பயந்து போய் போராட்டம் நடத்தாமல் இருப்பார்கள் என்பதற்காகக் கைது செய்கிறார்கள்” என்றார்.

செப்டம்பர் மாதம் ஜமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் இருந்து இந்தி இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். டெல்லியில் இருக்கும் அம்பேத்கர் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் படிக்க வேண்டும், எழுத்தாளர் ராஜேந்திர யாதவின் எழுத்து குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என விரும்புகிறார்.

லதீதா ஃபர்ஸானா

லதீதா, இரண்டாம் ஆண்டு அரபு இலக்கியம் படித்துக்கொண்டிருந்தபோதுதான் வீடியோ வைரல் ஆனது. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் உரையாற்ற இந்தியாவில் அவர் எங்கு சென்றாலும் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள். பீஹாரின் கிஷன்கஞ்ச், அராரியா மற்றும் ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடந்த போராட்டங்களில் பங்கேற்று லதீதா உரையாற்றினார்.

“நிறைய பெண்கள், சிறுமிகள் எங்களிடம் வந்து அழுதார்கள். இதுதான் நாங்கள் முதன்முறையாக ஒரு போராட்டத்தில் பங்கேற்றது எனப் பெருமையாக இருப்பதாகச் சொன்னார்கள்” என்றார்.

அவர் டெல்லி திரும்பிய போது, அந்நகர் முழுவதும் நிறைய போராட்டக் களங்கள் தோன்றியிருப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் வட கிழக்கு டெல்லியில் கலவரம் வெடிக்கத் தொடங்கியதை அவர் செய்தியில் பார்த்ததை நினைவுகூர்கிறார்.

“அப்போது என்ன செய்ய வேண்டுமென்பதே எங்களுக்குத் தெரியவில்லை. கலவரம் நடந்த பகுதிக்குப் போகவும் முடியவில்லை. வேதனையாக இருந்தது” என்றார்.

குரு தேக் பஹதூர் மருத்துவமனையில் கலவரத்தில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போது, மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்கிறார்.

முழு அடைப்பு தொடங்கியதில் இருந்து, தன் கணவரோடு கோழிக்கோட்டில் இருக்கிறார் ஃபர்ஸானா. ஆனால், டெல்லியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் கைதுகள் அவரை பதற்றத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. சதித்திட்ட வழக்கில் லதீதாவோடு படித்த சிலர் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

“எனக்கு விசாரணைக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஆனால், பிறரிடம் என்னைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம் உடன் எங்களுக்கு என்ன தொடர்பு எனக் கேட்டிருக்கிறார்கள். நான் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை. விசாரணையின் போது காவல்துறையினர் மாணவர்களை மன அளவிலும், உடல் அளவிலும் சோர்வடையச் செய்திருக்கிறார்கள்” என்றார்.

ஃபர்ஸானா கருவுற்று நான்கு மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், ஜமியாவில் படிப்பை இணைய வகுப்புகள் வழியே தொடர்கிறார். பல்கலைக்கழகம் திறக்கப்படுவதை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார். “வளாகத்தையும், போராட்டங்களையும் மிஸ் செய்கிறேன். போராட்டங்களில் பல்கலைகழகத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது, அது திறந்தால் மீண்டும் போராட்டங்கள் தொடரும். போராட்டங்களின் அடுத்த கட்டம் , கைது செய்யப்பட்ட மாணவர்களுக்குக் குரல் கொடுக்கும்” என்றார்.

அயிஷா ரென்னா

வீடியோ வைரலான பிறகு, 23 வயதான அயீஷா ரென்னாவும், அவர் குடும்பமும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். “எல்லாவற்றையும் ஒரே வாரத்தில் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால், எல்லாவற்றிலும் இருந்து தப்பித்து ஓடிவிட வேண்டும் என்றுதான் முதலில் தோன்றியது” என்கிறார்.

2019 டிசம்பர் டெல்லியில் நடந்த போராட்டங்களுக்கும், பிற மாநிலங்களில் நடந்த போராட்டங்களுக்கும் பயணித்த அயிஷா அங்கு போராட்டத்தில் பங்கேற்ற பெண்களைச் சந்தித்தார். “இந்நாட்டில் இஸ்லாமியர்கள் எப்படியான பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது.. அதனால் நான் செய்துகொண்டிருந்தவற்றில் இருந்து பின் வாங்க மாட்டேன் என முடிவு செய்தேன்” என்றார்.

நாடு முழுவதும் முழு அடைப்பு அமல் செய்யப்பட்டதற்கு ஒரு நாள் முன்தான் ரென்னா மலப்புரத்தில் இருக்கும் தன் ஊருக்குச் சென்றார். இணைய வகுப்புகள் வழியே ஜமியா மில்லியா இஸ்லாமியாவில் வரலாற்றில் முதுகலை படிப்பைத் தொடர்ந்தார்.

பிப்ரவரியில் கலவரங்களினால் பலர் கைது செய்யப்பட்டிருந்ததால், படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருந்ததாகச் சொல்கிறார். “வளாகத்தில் எல்லாருமே கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாங்கள் ஒரு இடத்தில் இருக்கவில்லை என்பதால், சமூக வலைத்தளங்களில் செயல்பட்டோம்” என்கிறார். “கொரொனா கட்டுப்பாடுகளால் எங்களால் எதுவுமே செய்ய முடியாததுதான் அதிர்ச்சியாக இருந்தது.”

இன்னமும் டெல்லிக் காவல்துறை சில மாணவர்களை விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்ற ரென்னா, “ காவல்துறையினர் போன் நம்பர்களையும், வேறு தொடர்பு விவரங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள் டெல்லியில் இருப்பவர்களை விசாரணைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் தெரிவித்தார்.

ஒரு வருடம் முன் காவல்துறையினரோடு உண்டான அந்த அனுபவத்தை மறக்க முடியவில்லை என்றாலுமே, பல்கலைக்கழகம் திறக்கப்படுவதற்கு ரென்னா காத்திருக்கிறார்.

“என்னால் அது குறித்துப் பேச முடியும். ஆனால் ஒவ்வொரு முறை அது குறித்து எழுத முயற்சிக்கும் போது அதிர்ச்சியடைகிறேன். ஒரு வருடம் ஆன பிறகும், அதைப் பற்றி எழுத பேனாவைப் பிடிக்கும் போது, ஏதோ போல் இருக்கிறது. இதயம் படபடவெனத் துடிக்கிறது” என்றார்.

“அந்த நாளில் நடந்தது எல்லாம் எனக்குத் துல்லியமாக நினைவிருக்கிறது. ஒவ்வொரு நொடியும். எப்படி சில காவல்துறையினர் சிரித்துக்கொண்டிருந்தார்கள், அவர்களின் முக பாவனை எப்படி இருந்தது என எல்லாம் நினைவில் இருக்கிறது” என்றார்.

ஃபாதிமா தஸ்னீம்

வீடியோ வெளியான பிறகு, அதில் இருக்கும் பெண்களை ஊடக நிறுவனங்கள் பேட்டியெடுத்தன. 27 வயதான தஸ்னீம், அதிலிருந்து விலகியிருக்க நினைத்தார். “நான் பயப்படவெல்லாம் இல்லை. எல்லா மாணவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களில் சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க ஒரு அவசியமும் இல்லை” என்றார்.

“இந்தியாவின் தலைநகரில் எப்படி இது நடந்தது. எப்படி காவல்துறையினர் பெண்களிடம் இப்படி நடந்துகொள்ளலாம்?”

அக்டோபர் மாதம் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இருந்து இஸ்லாமியப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார் தஸ்னீம். இப்போது, அரபு கலாச்சார படிப்புகளில் ஆய்வு செய்யத் தயார் செய்துகொண்டிருக்கிறார்.

வீடியோ வெளியான பிறகு, ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடந்த போராட்டங்களில் ஃபாதிமா கலந்துகொண்டார். டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மருந்துகள் வழங்க ஒரு லாப நோக்கமற்ற அமைப்போடு இணைந்து வேலை செய்த ஃபாதிமா, முழு அடைப்பிற்கு ஒரு நாள் முன் வயநாட்டில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்குச் சென்றார்.

சில மாதங்கள் கழித்து, ஃபாதிமாவின் நண்பர்கள் சிலரைக் காவல்துறையினர் சதித்திட்ட வழக்கில் விசாரணை செய்தனர். “அவர்கள் போராட மட்டும்தான் செய்தார்கள், பயப்பட எதுவும் இல்லை. காவல்துறை எது வேண்டுமானாலும் சொல்லலாம், அதில் ஒரு உண்மையும் இருக்காது” என்று தஸ்னீம் சொன்னார்.

அக்தரிஸ்தா அன்சாரி

2019 -ல் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த போது, 21 வயதாகியிருந்த அன்சாரி, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்துக்கொண்டிருந்தார். போலீசாரோடு உரசல் ஏற்பட்ட பிறகு அவரும் இந்தியாவின் பல இடங்களுக்குச் சென்று சென்று உரையாற்றினார். கேரளாவின் திருவனந்தபுரம், பீஹாரில் இருக்கும் நவாடா மற்றும் பெஹுசரய், மஹாராஷ்டிராவின் ஹிங்கோலி மற்றும் உட்கிர் பகுதிகளுக்குச் சென்று போராட்டங்களில் கலந்துகொண்டார்.

ஜார்க்கண்டின் தியோகர் பகுதியில் இருந்து வரும் அன்சாரரி, வட கிழக்கு டெல்லிக் கலவரத்தின் போது, பீஹாரில் இருந்தார். “என் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கொல்லப்படுவது, மசூதிகள் சேதம் செய்யப்படுவது எல்லாம் பார்க்க மிகக் கொடூரமாக இருந்தது.”

டிசம்பர் 15 அன்று காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்திய தாக்குதல்களைவிட வட கிழக்கு டெல்லிக் கலவரம் மோசமாக இருந்ததாக அன்சாரி சொல்கிறார். “வட கிழக்கு டெல்லிக் கலவரத்தில் என்ன நடந்தது என எங்களுக்கு தெரியும், அது இன்னமும் மோசமாக இருந்தது. இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் வன்முறையைச் சந்திப்பதுப் பழகிவிட்டது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என்றார்.

கொரோனா முழு அடைப்பின் போது, அன்சாரி பல்கலைக்கழக விடுதியில்தான் ஜூலை வரை தங்கியிருந்தார். “விடுதியில் மாணவர்கள் அதிகளவில் இல்லை. இருபது இருபத்தைந்து பேர்தான் இருந்தனர். எங்களை வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை” என்றார்.

இந்தக் காலகட்டத்தில்தான் அன்சாரியின் நண்பர்களில் சிலரும், ஜாமியா மாணவர்கள் சிலரும் பிப்ரவரி கலவரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர் அல்லது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். “எங்கள் யாராலும் வெளியே சென்று போராட முடியாது என்பதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு காவல்துறையினர் பலரைக் கைது செய்திருக்கின்றனர்” என்றார்.

சமூகவியலில் மேற்படிப்பைத் தொடர ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் அன்சாரிக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

(www.scroll.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்