Aran Sei

விவசாயிகள் போராட்டம் – 80 வயதான சிறு விவசாயி, முன்னாள் இராணுவ வீரரை கைது செய்த டெல்லி போலீஸ்

Image Credit : indianexpress.com

விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட, 80 வயதான முன்னாள் இராணுவ வீரரான குர்முக் சிங், டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குர்முக் சிங், பஞ்சாபின் ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தின் ஷமஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயி. அவர் தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கோதுமையும் நெல்லும் பயிரிட்டு வருகிறார்.

குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் ஒரு சிறு பகுதியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 122 பேர்களில் குர்முக் சிங்-ன் பெயரும் இருப்பதைக் கண்டு பஞ்சாபில் உள்ள அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

ஜனவரி 29-ம் தேதி குர்முக் சிங்-ஐ முகர்ஜி நகர் போலீஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

“அவர் தொடக்கத்திலிருந்தே விவசாயச் சட்டங்களை எதிர்த்து வந்தார். அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியின் சிங்கு எல்லையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.” என்று அவரது கிராமத் தலைவர் ஹர்பிந்தர் சிங் கூறியுள்ளார்.

“அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பாக இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் ஒரு ஒழுக்கமான வாழ்வை நடத்தி வந்தார், ஒரு நாளைக்கு இரு முறை குருத்வாரா செல்வார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குர்முக் சிங்-ன் மூத்த மகன் ஜஸ்பீர் சிங் இத்தாலியில் வசிக்கிறார். அவரது இளைய மகன் குல்பீர் சிங், கிராமத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள கமானோவில் வசிக்கிறார். குர்முக் சிங்-ன் மனைவி மஞ்சித் கவுர், ஜஸ்பீர் சிங்-ன் மனைவி மற்றும் மகன் கிராமத்தில் வசிக்கின்றனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

சிரோமணி அகாலி தள் (மான்) கட்சி குர்முக் சிங்-ஐ விடுவிக்க முயற்சி எடுக்கப் போவதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். “வயதானவர்களையும் 21 வயதுக்குக் குறைவான இளைஞர்களையும் விடுவிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவோம்” என்று வழக்கறிஞர்களில் ஒருவராக அமர்வீர் சிங் புல்லார் கூறியுள்ளார்.

குர்முக் சிங், சிரோமணி அகாலி தள் (மான்) கட்சியுடன் பல ஆண்டுகளாக தொடர்பில் இருப்பதாக கிராமத்து மக்கள் கூறுகின்றனர். “அவரது வயதையும் பொருட்படுத்தாமல் போலீஸ் அவரை கைது செய்திருப்பது ஆச்சரியமளிக்கிறது” என்று முன்னாள் கிராமத் தலைவர் சத்னம் சங் கூறியுள்ளார்.

“பஞ்சாயத்தின் அனைத்து உறுப்பினர்களும், கிராமத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் குர்முக் சிங்குக்கு ஆதரவாக டெல்லி செல்லவுள்ளோம். நாங்கள் அவருக்கு உதவி செய்ய முயற்சிப்போம். அவர் விரைவில் வீடு திரும்ப விரும்புகிறோம்” என்று கிராமசபை உறுப்பினர் ஹர்மன் சிங் கூறியுள்ளார்.

“கிராமத்தில் 1,250 வாக்காளர்கள் உள்ளனர். நாங்கள் அனைவருமே விவசாயச் சட்டங்களை எதிர்க்கிறோம். குர்முக் சிங்கின் கைதை எதிர்த்தும், சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் நாங்கள் டெல்லி எல்லைக்கு மேலும் அதிக எண்ணிக்கையில் செல்லவிருக்கிறோம். இப்போதைக்கு கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் சிங்கு எல்லையில் உள்ளனர்” என்று கிராமத் தலைவர் ஹர்பிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

புதன் கிழமையன்று சுமார் 25 பேர் கிராமத்திலிருந்து டெல்லி செல்லவுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்