Aran Sei

`சாதி மறுப்புத் திருமணம் செய்தால் இரண்டரை லட்சம்’ – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

டிசாவில் சாதி மறுப்புத் திருமணம் புரியும் தம்பதிகளுக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாகவும் அவ்வகை திருமணங்களை ஊக்குவிக்கப் பிரத்யேக இணையதளத்தைத் தொடங்க இருப்பதாகவும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27), சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள `சுமங்கல்’ இணையதளத்தை நவீன் பட்நாயக் (www.sumangal.odisha.gov.in) தொடங்கிவைத்தார். அப்போது அவர், சாதி மறுப்புத் திருமணம் புரியும் தம்பதிகளுக்கான ஊக்கத்தொகையை ஒரு லட்சத்தில் இருந்து இரண்டரை லட்சமாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “சாதி மறுப்புத் திருமணங்கள் சமூக ஒற்றுமையை அதிகரித்துள்ளதோடு, சாதிய பாகுபாடுகளையும் குறைத்துள்ளது. இது சமுதாயத்தில் சமத்துவத்தையும் அமைதியான சகவாழ்வையும் ஊக்குவித்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கத் தொடங்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தை எஸ்.சி, எஸ்.டி வளர்ச்சி, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உருவாக்கியிருக்கிறது.

நன்றி : ommcomnews.com

2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சாதி மறுப்புத் திருமணங்களுக்கான ஊக்கத்தொகையை 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக ஒடிசா அரசு உயர்த்தியிருந்தது.

இந்த ஊக்கத் தொகையைப் பெற, அந்தத் திருமணம் உயர்சாதியைச் சேர்ந்தவருக்கும் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்குமான திருமணமாக இருக்க வேண்டும். இந்து திருமணச் சட்டம் 1955 படி, அந்தத் திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் தம்பதிகளில் யாரேனும் ஒருவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 341 பிரிவின் படி பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த விதிகளின் கீழ் சாதி மறுப்புத் திருமணம் செய்யப்பட்டிருந்தால், ஏதேனும் ஒரு தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கியில் உள்ள தம்பதிகளின் கூட்டுக் கணக்கிற்கு ஊக்கத் தொகை அனுப்பி வைக்கப்படும். அதைத் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்புதான் வங்கியில் இருந்து பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

முதல் திருமணம் செய்துகொள்பவர்கள், இந்த ஊக்கத்தொகையைப் பெற தகுதியுடையவர்கள். மேலும், கணவனை இழந்தவர்களும் மனைவியை இழந்தவர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்