சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அது தொடர்பான அறிவிப்பை கட்டாயமாக பொதுவில் வெளியிட வேண்டும் என்பது தனி நபரின் அந்தரங்க உரிமையை மீறுகிறது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு வயது வந்த பெண் தனது விருப்பப்படி வேறு மதத்தைச் சேர்ந்த தனது காதலருடன் திருமணம் செய்து கொள்வதை தடுக்கும் வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற ஆட்கொணர்வு மனு மீது நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
தாங்கள் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்து கொள்ள முடியும் என்றாலும் 30 நாட்கள் பொது அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புகள் வரவேற்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் தங்களது அந்தரங்க உரிமைகளை பாதிப்பதாகவும், அது தேவையில்லாத சமூக அழுத்தத்தையும் தலையீட்டையும் உருவாக்கி திருமணம் தொடர்பான அவர்களது சுயேச்சை உரிமையை பாதித்திருக்கும் என்றும் அந்த தம்பதியினர் முறையிட்டிருந்தனர்.
‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்
சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவ 6-ன் கீழ் திருமணம் தொடர்பான நோட்டீசை வெளியிட வேண்டும் என்பதும் பிரிவு 7-ன் கீழ் அதற்கான எதிர்ப்புகளை கோருவதும், அவற்றை பரிசீலிப்பதும் கட்டாயம் இல்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்தப் பிரிவை கட்டாயமாக்குவது, தொடர்புள்ள நபர்கள் தமது திருமணம் தொடர்பாக முடிவெடுக்கும் சுதந்திரம் உட்பட தனிநபர்களின் அந்தரங்க உரிமை மீதான தாக்குதல் என்று நீதிபதி விவேக் சவுத்ரி கூறியுள்ளார்.
‘லவ் ஜிகாத்’ – சேர்ந்து வாழும் உரிமை அடிப்படையானது – அலகாபாத் உயர்நீதிமன்றம்
சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் திருமணத்துக்கான விண்ணப்பத்தை கொடுக்கும் போது, அது தொடர்பான நோட்டீசை வெளியிடுவதா வேண்டாமா என்று என்பதை திருமண மனுவை கொடுத்தவர்களே தீர்மானிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அவர்கள், நோட்டீசை வெளியிடும்படி எழுதித் தரவில்லை என்றால், திருமண அதிகாரி அத்தகைய நோட்டீசை வெளியிடவோ, பொதுமக்களிடமிருந்து திருமணத்துக்கான எதிர்ப்புகளை வரவேற்கவோ கூடாது. திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
“ஆனால், திருமணம் செய்து வைக்கப்படுபவர்களின் அடையாள விபரங்கள், வயது, செல்லுபடியாகும் ஒப்புதல் போன்றவற்றை சரிபார்ப்பதை திருமண அதிகாரி செய்யலாம். அவருக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், இது தொடர்பான விபரங்களையும், ஆதாரங்களையும் அவர் கேட்கலாம்” என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
ஒரு இஸ்லாமிய ஆணும், இந்து பெண்ணும் முத்தமிட்டால்.. – அதனால் என்ன?
மனுதாரர்களின் முறையீடுகளை கணக்கில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம், 1872-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 1954-ம் ஆண்டு திருத்தப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டத்தின் 5, 6, 7வது பிரிவுகள் தொடர்பான புரிதல், அதன் பிறகு சமூக நிலைமைகளிலும் சட்டங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளதா என்றும், அத்தகைய மாறுதல்கள் மூலம் இந்த பிரிவுகள் இனிமேலும் கட்டாயமானவை ஆக இல்லாமல் போய் விட்டனவா என்றும் ஆய்வு செய்தது.
இது தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சவுத்ரி, சிறப்பு திருமணச் சட்டம் நிறைவேற்றப்படுவது வரையிலான இந்திய சட்ட கமிஷன் அறிக்கைகளையும் சட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார். புட்டுசாமி வழக்கு (அந்தரங்க உரிமை தீர்ப்பு) உள்ளிட்ட பல்வேறு தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டிய, நீதிபதி சவுத்ரி, இப்போதைய தேவைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் வாழும் இப்போதைய தலைமுறையினர் 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தலைமுறையின் பழக்கங்களையும் பாரம்பரியத்தையும் பின்பற்ற வேண்டும் என்று சொல்வது குரூரமானதும் அறமற்றதும் ஆகும் என்று கூறியுள்ளார்.
150 ஆண்டுகளுக்கு முந்தைய சமூக தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் பொருத்தமான எதிர்பார்ப்புகளை இன்றும் பின்பற்றச் சொல்வது நீதிமன்றங்கள் இன்று அங்கீகரித்துள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அவர் முடிவு செய்துள்ளார்.
‘உங்களுக்கு எத்தனை முறை சொல்வது?’ – மதமாற்ற விவகாரத்தில் உ.பி., அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்
சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமண நடைமுறையை அதிக பாதுகாப்பானதாகவும், அதிக தடைகளை ஏற்படுத்தக் கூடுவதாகவும் ஆக்குவதன் மூலம் நியாயமான நோக்கம் எதுவும் நிறைவேறவில்லை என்று நீதிமன்றத்தின் தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது.
இது தொடர்பான செய்தியை வெளியிட்ட லைவ் லா தலைமை ஆசிரியர் மனு செபாஸ்டியன், இதே நிபந்தனை மீது வழக்கு தொடுக்கப்பட்ட போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ன சொன்னார் என்பதை ட்வீட் செய்துள்ளார்.
Allahabad HC delivered a landmark verdict today taking away mandatory notice under Special Marriage Act.
When the same provision was challenged in the Supreme Court, CJI Bobde said : pic.twitter.com/jVGtQpyypv
— Manu Sebastian (@manuvichar) January 13, 2021
சிறப்பு திருமணச் சட்டம், 1954-ன் கீழ் திருமணத்திற்கு முன் தங்கள் தனிப்பட்ட விவரங்களை உறுதி செய்ய வேண்டும், திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் திருமண அறிவிப்பை வெளியிட்டு பொது பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்க்கும் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதையும் லைவ் லா சுட்டிக் காட்டியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.