Aran Sei

பாஜக நிர்வாகிகள் அறிவிப்பு: புறக்கணிக்கப்பட்ட தமிழகம் – பதவியிழந்த எச்.ராஜா

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. அப்பட்டியலில் 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள், இணையதள இளைஞர் பிரிவு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா என தமிழ்நாட்டைத் தவிர மற்ற அனைத்து தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன் தேசியச் செயலாளராக இருந்த ஹெச். ராஜா உள்பட தமிழக பாஜகவினர் எவருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, தமிழக பாஜகவின் மீதான அதிருப்தியே இதற்குக் காரணம் என்கிறார்.

“தென் தமிழகத்தில் ஆந்திராவிலிருந்து புரந்தேஸ்வரி, சத்யகுமார். கர்நாடகாவிலிருந்து சி.டி.ரவி, தேஜஸ்வி சூர்யா. கேரளாவிலிருந்து அப்துல்லாகுட்டி. தெலுங்கானாவிலிருந்து கே.லக்‌ஷ்மண், அருணா என தென்னிந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என்று கருதப்படக்கூடியவர்கள். இந்த நிர்வாகிகள் தேர்வை வைத்துப் பார்க்கையில் பாஜகவின் எதிர்கால நோக்கை கருத்தில் கொண்டே இப்பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

“தமிழ்நாட்டிலிருந்து தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆளுநர் பதவியும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன. முன்பு எச்.ராஜாவுக்கு தேசிய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற பாஜக தமிழகத்தில் 3 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தமிழகத்துக்குள் பாஜக கட்சியின் வளர்ச்சி நோக்கிய செயல்பாடுகளில் தமிழக பாஜகவின் நடவடிக்கைகள் மீதான அதிருப்தி கூட இதற்குக் காரணமாக இருக்க முடியும்” என்று கூறுகிறார் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.

எச்.ராஜாவின் தேசிய செயலாளர் பொறுப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்திலிருந்து ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படாதது வருந்தத்தக்கது என்கிறார் பத்திரிகையாளர் சுமந்த் சி ராமன்.

“தகுதியான தலைவர்கள் இருந்தும் தமிழக பாஜகவினருக்கு பொறுப்புகள் வழங்கப்படாதது உண்மையிலும் வருந்தத்தக்கது. தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி மிகக்குறைவாக இருப்பது கூட தலைமையின் இம்முடிவுக்குக் காரணமாக இருக்கலாம்” என்கிறார் சுமந்த் சி ராமன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்