Aran Sei

`புலம்பெயர் சிறுமியின் மர்ம மரணம்’ – இழுத்தடிக்கப்பட்ட எஃப்ஐஆர்

Image Credits: The Quint

க்டோபர் 4-ம் தேதி, 17 வயதான சிறுமி, ஒரு வாரம் அவர் உதவியாளராக வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் இறந்துகிடந்தார்.

அவரது உடல் அடையாளம் காணப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், இந்தச் சிறுமி தனது தாய் வழி அத்தையை அழைத்து, முந்தைய நாள் இரவு ஓட்டுநர் அறையில் தூங்குமாறு அந்த வீட்டினர் அவரைக் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் காவலர்கள் கூறியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் சிறுமி வேலை செய்து வந்த வீட்டின் உரிமையாளர்தான் அவரைப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அவர்களின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில் அவரது தாயார் இறந்ததிலிருந்து அவரது தாய் வழி அத்தையுடன் சிறுமி வசித்து வந்தார். அவரது தந்தை ஒரு குடிகாரர் என்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கான பொறுப்பை அவர் ஏற்க விரும்பவில்லை என்றும் சிறுமியின் அத்தை கூறியதாக ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஆகையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரியை மற்றொரு அத்தை மற்றும் அவரது தம்பியை ஒரு மாமா தத்தெடுத்தனர்.

நிஷாத் சமூகத்தைச் சேர்ந்த – உபியில் மிகவும் பின்தங்கிய சமூகமாகவும் டெல்லியில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட சமூகமாகவும் அங்கீகரிக்கப்பட்ட இந்தக் குடும்பம் வேலை தேடி டெல்லிக்குக் குடிபெயர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

சிறுமியின் அத்தை பல வீடுகளில் வீட்டு உதவியாளராக வேலை செய்கிறார், முக்கியமாக வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சிறுமியின் அத்தை பல வீடுகளில் வீட்டு உதவியாளராக வேலை செய்கிறார், முக்கியமாக வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். “நாங்கள் வாடகை வீட்டில் வாழ்கிறோம், படித்தவர்கள் அல்ல. இந்த வீடுகளில் நாங்கள் வேலை செய்யவில்லை என்றால், நாங்கள் எப்படி உயிர்பிழைப்போம்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக இச்செய்தி குறிப்பிடுகிறது.

மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்திலிருந்து, வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் குடும்பத்தினர் பணம் எதுவும் சம்பாதிக்கவில்லை. பாதிக்கப்பட்டவரின் வேலைவாய்ப்பு பற்றிய செய்தி ஆரம்பத்தில் அவர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.

Image Credits: The Wire
Image Credits: The Wire

பாதிக்கப்பட்ட சிறுமி செப்டம்பர் 26 அன்று முழுநேர வீட்டுப் பணியாளராக வேலையைத் தொடங்கியுள்ளார். ஒரு பெண், தனியாக வசித்து வந்த தனது வயதான, நோய்வாய்ப்பட்ட தாயைக் கவனித்துக்கொள்வதற்காகச் சிறுமியைப் பணியமர்த்தியுள்ளார். அப்போது ஒரு ஓட்டுநர் மட்டும் அவ்வப்போது அவரது தாயைச் சந்திக்க வந்துபோவதாகக் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பதின்வயது பெண் பணிஅமர்த்திய பெண்ணின் வீட்டிலிருந்து அவரது வயதான தாயின் வீட்டிற்கு ஓர் ஓட்டுநரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் அத்தை இதனை மறுத்துள்ளார். ஆனால் அந்த வயதான தாயின் வீட்டுக்குச் சென்றவுடன் அவருக்கு அது குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அது நடந்தும் உள்ளது. பாதிக்கப்பட்டவர் அக்டோபர் 1 ம் தேதி பணி அமர்த்திய பெண்ணின் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறுமியின் அத்தையும் கூட அப்போது அவளைப் பார்க்க அந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். “அவள் நன்றாக இருப்பதாகத் தோன்றியது, அந்த நேரத்தில் அனைத்தும் சாதாரணமாகத் தெரிந்தன,” என்று சிறுமியின் அத்தை தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று நாட்களுக்கு, அவர் இறந்த நாள் வரை, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. “அக்டோபர் 4 மதியம் 3.14 மணிக்கு, வீட்டு உரிமையாளரின் லேண்ட்லைனில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என் [தத்தெடுக்கப்பட்ட] மகள் மிகவும் தயக்கத்துடன் பேசினால், தெளிவாக எதையோ பகிர்ந்துகொள்ள விரும்பினாள் என்பதை நான் உணர்ந்தேன். ஆனால் அவளின் முதலாளி [வயதான பெண்] அவரது முன்தான் என்னிடம் பேச அனுமதிப்பார். அவளது முதலாளி அவருக்கு முன்னால் பேசச் சொல்வதை என்னால் கேட்க முடிந்தது. ஏதோ மறைக்கப்படுவது போல் உணர்ந்தேன். அழைப்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டது, ”என்று சிறுமியின் அத்தை கூறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, பாதிக்கப்பட்டவர் மீண்டும் அழைத்துள்ளார். “இறப்பதற்கு முந்தைய நாள் இரவு, அவளை ஓட்டுநர் இருந்தபோதே அவரின் அறையில், தூங்கும்படி அவளின் முதலாளி கேட்டுக்கொண்டதாக அவள் என்னிடம் சொன்னாள்,” என்று சிறுமியின் அத்தை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்தப் பெண் தனது அத்தைக்கு ஓட்டுநர் அறைக்குச் செல்வதற்குப் பதிலாக, வீட்டின் படியில் அமர்ந்து இரவைக் கழித்ததாகக் கூறியுள்ளார். “அழைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது. பின்னால் முதலாளியின் சத்தத்தைக் கேட்க முடிந்தது. அவள் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசுவதைக் கண்டுபிடித்துவிட்டார். நான் மிகவும் பயந்தேன்,” என்கிறார்.

இங்கிருந்து, விவரங்கள் சிறுமியின் அத்தைக்குத் தெரியவில்லை, வயதான பெண்ணைக் கவனித்துச் சிறிய வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆரம்பத்தில் வழங்கிய வேலை விவரத்தைச் சந்தேகிக்கும் சிறுமியின் அத்தை, இது ஒரு பாசாங்காக இருக்கக்கூடும் என்கிறார்.

மாலை 5.30 மணி வரை, இவர் மீண்டும் அழைப்பு வரும் என்று காத்திருந்துள்ளார்.

“நான் மாலை 5.30 மணியளவில் வேலைக்குச் சென்றேன். பின்னர், என் [தத்தெடுக்கப்பட்ட] மகள் தன்னை ஒரு அறையில் பூட்டிக்கொண்டாள், கதவைத் திறக்கவில்லை என்று எனக்குத் தகவல் கிடைத்தது,” என்று அவர் கூறியுள்ளார். அருகில் வசித்த பணிஅமர்த்திய பெண், சிறுமியின் அத்தை மற்றும் அவரது மாமியார் உடனடியாக வயதான பெண்ணின் வீட்டிற்குப் புறப்பட்டனர். வழியில், “சிறுமி தன்னை உள்ளே பூட்டியிருந்ததால் அவர்கள் காவலர்களை அழைத்துள்ளதாக,” வயதான பெண் அத்தையை எச்சரித்துள்ளார்.

“நான் பணிஅமர்த்திய பெண்ணுடன் வந்து என் மகளுக்குப் புத்தி சொல்ல வேண்டும் அல்லது அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வயதான பெண் கூறினார். நான் அவளைத் திரும்ப அழைத்துச் செல்வதாகக் கூறினேன். சென்று கொண்டிருந்தபோது, வீட்டுக்கு வெளியே காவலர்கள் இருப்பதாகவும், அவர்களிடம் என் மகளின் வயதைக் குறித்துப் பொய் சொல்ல வேண்டும் என்றும் வயதான பெண் கூறினார். 17 க்குப் பதிலாக 19 வயது என்று மாற்றிக் கூற வேண்டும் என்று அவர் சொன்னார்,” எனச் சிறுமியின் அத்தை தெரிவித்துள்ளார்.

அங்கு சென்றடைந்து காவலர்களைக் கண்டவுடனே ஏதோ தவறாக நடந்திருப்பதை நான் உணர்ந்தேன், அவளைப் பார்க்க வேணும் என்று நான் கோரினேன். வயதான உரிமையாளர் முதலில் காவலர்களுக்கு விவரங்களை வழங்கக் கூறிவிட்டு என்னைப் பார்க்க அனுமதித்தார். நான் விவரங்களைக் கூறிவிட்டு அவளைப் பார்க்கச் சென்றேன். அவள் அறைக்குள் இருந்தால், அவளது பின்புறத்தைத்தான் முதலில் பார்த்தேன். அவள் எழுந்து நிற்க முயற்சிக்கிறாள் என்று நான் நினைத்தேன். ஆனால், அருகில் சென்றவுடன்தான் அவள் இறந்து கிடந்தது எனக்குத் தெரியவந்தது,” என்றும் அந்த அத்தை கூறியுள்ளார்.

Image Credits: The Wire
Image Credits: The Wire

உடலைத் தொடக் கூடாது என்று சிறுமியின் அத்தையிடம் கூறப்பட்டுள்ளது, சடலம் அவசர ஊர்திக்குக் கொண்டுசெல்லப்பட்டது.  “அடுத்த நான்கு நாட்களுக்கு நாங்கள் அவளின் உடலைப் பெற மாட்டோம் என அப்போது எனக்குத் தெரியாது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அன்று மாலை, ​​பாதிக்கப்பட்ட சிறுமியின் அத்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மாடல் டவுன் காவல் நிலையத்தில் காத்திருக்கவைத்து அவர்களின் புகார் பெறப்பட்டது. “அடுத்த நாள் அதிகாலை 2 மணி வரை நாங்கள் அங்கு இருந்தோம். அப்போது என் மகள் இறந்து கிடந்த வீட்டு உரிமையாளர்களின் குடும்பத்தினர் விசாரிக்கப்படுவதை நான் காணவில்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்குப் பிறகுதான் உடலைப் பெறுவதற்கான போராட்டம் தொடங்கியுள்ளது. “காவலர்களிடம் சடலத்தைக் கேட்டபோது நாங்கள் அவளின் உறவினர் என்று நிரூபிக்க வேண்டும் இல்லாவிட்டால் அவளின் தந்தையை அழைத்து வருமாறு கூறினார். ஆனால் அப்போது அவளின் வாழ்க்கையிலேயே அவளின் தந்தை இல்லை. அவர் குடிக்கும் போதைக்கும் அடிமையானவர். அவர் எப்போதும் அவரின் குழந்தைகளைக் குறித்துக் கவனம் செலுத்தியது இல்லை. இப்போது நாங்கள் ஏன் அவரை அழைத்து வர வேண்டும். அந்தக் குழந்தையை நாங்கள் வாழ்நாள் முழுவதும் பார்த்துக்கொண்டாலும், அவர்கள் சிறுமியின் பெற்றோரோ உடன்பிறந்தவர்களோ வந்தால்தான் உடலை வழங்க முடியும் என்று தெரிவித்துவிட்டார்கள். ஆகையால் நாங்கள் அவளின் 24 வயதான மூத்த சகோதரியை அழைத்தோம். அவளிடமும் அவர்கள் உடலை ஒப்படைக்க மறுத்துவிட்டனர். அவர்கள், நாங்கள் இருக்கும்போதும் சிறுமியின் சடலத்தை அடையாளம் காணப்படாத சடலங்களின் பிரிவில் வைப்பதாகக் கூறினார்,” என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த நான்கு நாட்களுக்குப் பாதிக்கப்பட்டவரின் தந்தையைத் தொடர்புகொள்ள இவர் முயற்சித்துள்ளார். இருப்பினும், அவரை அணுகவோ கண்டுபிடிக்கவோ முடியவில்லை.

அக்டோபர் 7 அன்று, சிறுமி இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அத்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் சிறுமி வேலை செய்த பங்களாவுக்குச் சென்று போராட்டம் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, 8 பெண்களும் 4 ஆண்களும் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் அத்தை, ஆண் காவல்துறை அதிகாரிகள் தனது 70 வயது மாமியார் உட்பட பெண் கைதிகளுடன் தவறாக நடந்துகொண்டனர் என்று கூறியுள்ளார். “எங்கள் குடும்பத்தின் ஆண்  உறுப்பினரை மூச்சி நின்றுபோகும் அளவுக்குக் காவலர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். அவர் இறந்துவிடுவார் என்று அவர்கள் பயந்ததால் காவல்துறையினர் அவரை அடிப்பதை நிறுத்தி அவருக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டியிருந்தது. நாங்கள் ஒரு மகளை இழந்துவிட்டோம். ஆனாலும் நாங்கள்தான் விசாரிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளோம்,” என்கிறார் அவர்.

Image Credits: The Wire
Image Credits: The Wire

தங்களது  பராமரிப்பில் இளம் குழந்தைகள் இருப்பதை மேற்கோள் காட்டி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தங்களை அடிக்க வேண்டாம் என்று காவலர்களிடம் கெஞ்சியபோது, “பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளட்டும், ஏனெனில் நீங்கள் டெல்லியை விட்டு வெளியேறுவதை நாங்கள் உறுதி செய்வோம். நாங்கள் இனி உங்களை டெல்லி நகரத்தில் வாழ அனுமதிக்க மாட்டோம்,” என்று கான்ஸ்டபிள்கள் கூறியதாகச் சிறுமியின் அத்தை குற்றம் சாட்டியுள்ளார்.

வன்புணர்வு மற்றும் சந்தேகத்திற்கிடமான கொலை குறித்த குடும்ப உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்குக் காவலர்கள் எஃப்ஐஆர் அல்லது புகார் எதுவும் பதிவு செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அக்டோபர் 16 மதியம், மாடல் டவுன் காவல் நிலையத்திற்கு வெளியே பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சில மாணவர்கள் உட்பட சுமார் 45 பேர் போராட்டம் நடத்தினர். டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் எம்.பில் பயிலும் மாணவர் ஃபிரோஸ் ஆலம் போராட்டக்காரர்களில் ஒருவர், இந்த வழக்கில் எஃப்ஐஆர் அல்லது புகார்ப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.

“அவர்கள் எங்களை அடிக்க ஆரம்பித்தார்கள், அங்கிருந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். பல வற்புறுத்தல்களுக்குப் பிறகு, காவல்துறை அதிகாரி வெளியே வந்து, எங்களுக்கு மருத்துவச் சட்ட வழக்கின் (எம்எல்சி) அறிக்கையை அளித்து எங்களை வெளியேறச் சொன்னார்கள், இது ஒரு தற்கொலை என்பதை எம்எல்சி உறுதிப்படுத்தியிருப்பதைக் கூறினார்கள்,” என்று ஃபிரோஸ் கூறியுள்ளார்.

ஃபிரோஸுக்குக் கால்கள், கைகள், முதுகு மற்றும் முகத்தில் பல காயங்களை ஏற்படுத்தியுள்ளார். “ஏசிபி எங்களை அவதூறாகப் பேசினார், இவ்வளவு படித்த ஒருவர் பாலின அடிப்படையிலான தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்று என்னால் நம்ப முடியவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு டெல்லியின் டிசிபி ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதில் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு நடத்திய விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பிரேதப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மரணம் தற்கொலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 8 ம் தேதி வஜீர்பூர் தகன மைதானத்தில் சிறுமியின் உடல் அவரது குடும்ப உறுப்பினர்களால் தகனம் செய்யப்பட்டது என்று காவல் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, பிஞ்ச்ரா டோட் மற்றும் எஸ்எஃப்ஐ உள்ளிட்ட பல டெல்லிப் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் காவலர்களின் செயலற்ற தன்மைக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டன மற்றும் குடும்பத்தின் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தின. இந்தச் சம்பவம் அண்மையில் ஹத்ராஸில் நடந்த பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்குக்கு நிகரான ஒன்று என்றும் அவர்கள் கூறினர்.

இந்தப் போராட்டத்தைப் பதிவு செய்யச் சென்றிருந்த ‘தி கேரவனின்’ பத்திரிகையாளரை டெல்லிக் காவலர்கள் கைது செய்தனர். அஹான் பெங்கர் எனும் 24 வயதான இந்த ஊழியருக்கு மூக்கு, தோள்பட்டை, முதுகு மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது பத்திரிகை அடையாள அட்டையை வெளிப்படையாகக் காட்டிய பிறகும் மாடல் டவுனின் உதவிக் காவல் ஆணையர் அஜய் குமார் அவரை அறைந்து, உதைத்துக் காவல் நிலையத்திற்குள் தள்ளியுள்ளதாக அஹான் பெங்கர் தெரிவித்துள்ளார்.

அஹான் பெங்கரின் தொலைப்பேசி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுப் போராட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் நீக்கப்பட்டன என்று அவர் கூறியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 8 (பாதிக்கப்பட்டவர் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு) தேதியிட்ட மருத்துவச் சட்ட அறிக்கை, “பிறப்புறுப்பின் தசையில் குணமடைந்த பழைய காயம் கடிகார நிலை படி 4° மற்றும் 8°-ல் உள்ளன, மற்றவை இயல்பு நிலையில் உள்ளன,” என்று குறிப்பிடுவதாக ‘தி வயர் செய்தி குறிப்பிடுகிறது.

சமீபத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையினர் கட்டாய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதற்காக மாநிலங்களுக்கும் மத்தியப் பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியது. அதில், இதைச் செய்யத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. இருப்பினும், இந்தச் சிறுமியின் வழக்கில் காவலர்களுக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்