Aran Sei

“ஆதாரம் இல்லை”- வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் விடுவிப்பு

credits : business standard

டெல்லி உயர்நீதி மன்றம் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்டு சிறையில் அடைபட்டிருக்கும் 8 வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா ஊரடங்கை மீறியதாக தப்லீக் ஜமாஅத் சபையின் உறுப்பினர்களை இந்திய அரசு கைது செய்தது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட 3,500-க்கும் மேற்பட்ட  நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 750 க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள். அவர்கள் மீது விசா விதி மீறலில் ஈடுபட்டதாகவும், கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றதாகவும் கூறி டெல்லிக் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ம் தேதி இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம், அவர்களுக்கு எதிராக எந்த அழுத்தமான ஆதாரமும் இல்லையென்பதால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர்களை விடுவித்து தீர்ப்பளித்தது. ஆனால் இந்தத் தீர்ப்புக்கு எதிராக அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை செய்த மேல்முறையீடு நிலுவையில் இருந்தது.

இதற்கு எதிராக ஆஜராகிய வக்கீல்கள் ஆஷிமா மண்ட்லா மற்றும் மண்டகினி சிங் தாக்கல் செய்த மனுவில், அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு வெளிநாட்டவர்கள் பாஸ்போர்ட்டைத் திரும்பப் பெற்றிருந்தாலும், அவர்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கான உரிமையும் கவன ஈர்ப்பு சுற்றறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை என மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி சந்தீப் யாதவ், வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கோரிய மனுவிற்குச் சில நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் விசாரணை அதிகாரியிடம் (ஐஓ) வெளிநாட்டவர்கள் அவர்கள் நாடுகளுக்குச் செல்ல தடையாக இருக்கும் கவன ஈர்ப்பு சுற்றறிக்கையை விரைந்து முடிக்குமாறு நீதிபதி கூறியுள்ளார்.

வெளிநாட்டினர் மீது காவல் துறை தாக்கல் செய்துள்ள திருத்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அந்த மனுக்களின் விசாரணையின் போது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ரூ.30,000 ஜாமீன் தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவும் அவர்களின் பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு விசாரணை அதிகாரியிடம் வழங்குமாறும் நீதிபதி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த வெளிநாட்டுக் குடிமக்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள்,

188 – அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாதது,

270 – உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரப்ப முயன்றது,

271 – தனிமைப்படுத்தப்படும் விதிகளை மீறியது,

120 பி – குற்றச் சதி

51 – பேரிடர் மேலாண்மைச் சட்டம்

14 (1) (பி) – விசா விதிமுறைகளை மீறுவது வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் மற்றும் தொற்று நோய்கள் சட்டத்தின் பிரிவு 3 (ஒழுங்குமுறையை மீறுதல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்திலிருந்தும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்களில் இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தில் இருந்து தலா இருவர், கிரிகிஸ்தான், நைஜிரீயா மற்றும் ஜார்டனில் இருந்து ஒருவர் என மொத்த 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்