Aran Sei

‘ பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டம் இல்லை ‘ : தீர்ப்பு முழு விபரம்

https://commons.wikimedia.org/

யோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 28 ஆண்டுகள் கழித்து நேற்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வழக்கில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் எல்.கே அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்ட்ட ஆதாரங்களில் எந்த ஒரு இடத்திலும் அல்லது நிகழ்வுகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒன்றாக அமர்ந்து பாபர் மசூதியை இடிப்பது தொடர்பாக திட்டம் தீட்டப்பட்டது நிரூபிக்கப்படவில்லை என சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே யாதவ் கூறியுள்ளார்.

சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் ஜன்சபா கூட்டங்கள் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்திகள் ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கூறியதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை அவர்களுடைய வாக்கு மூலங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள நீதிபதி, இதைக் காரணமாக சொல்லி, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ மற்றும் பத்திரிகை ஆதாரங்களை நிராகரித்துள்ளார்.

ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களின், நெகட்டிவ்களோ அல்லது அதை எடுத்தவர்களின் கையெழுத்தோ இடம் பெறவில்லை என்று கூறி அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

நடந்தவற்றை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலமும், நீதிமன்றத்தில் நேரடியாக அளித்த வாக்குமூலமும் முரணாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி ஆகவே, அவற்றை நிராகரிப்பதாக கூறியுள்ளார்.

சாட்சியளித்தவர்கள் யாரும், குற்றம் சாட்டப்பட்டவர்களை குறிப்பிட்டு அவர்கள்தான் மசூதியை இடித்ததாகக் கூறவில்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் லட்சக்கணக்கானவர்கள் குழுமியிருந்த அந்த நாளில் புழுதியின் நடுவில் நபர்களை அடையாளம் காண்பது எளிதல்ல என்று கூறி சாட்சிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேடை அமைக்கப்பட்ட இடத்திலிருந்து 200 அல்லது 300 மீட்டர் தொலைவில் மசூதி அமைந்திருந்ததாக கூறியுள்ள நீதிபதி, சாட்சி சொன்னவர்கள் 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகக் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, அவர்களுடைய சாட்சிகளும் நிராகரிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

Credit : https://commons.wikimedia.org/

பாகிஸ்தானிலிருந்து அயோத்திக்கு வெடிகுண்டுகள் கொண்டு வரப்பட்டதாகவும், ஜம்மு காஷ்மீரிலிருந்து 100 பேர் கொண்ட தேச விரோத கும்பல் அயோத்திக்கு வந்ததாகவும் உளவுத்துறை அப்போது அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, இவற்றை வைத்துப் பார்க்கும்போது, மசூதியை யார் இடித்தார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

விஷ்வ இந்து பரீஷித்தின் தலைவர் அசோக் சிங்கால், கரசேவகர்ளை ஒழுங்குபடுத்த முயற்சித்ததாகவும், ஆனால் அவருடைய சொல்லையும் மீறி சிலர் மசூதியை இடிக்க ஓடியதாக நீதிமன்றம் கூறுகின்றது. அத்துடன் அவர்களை அமைதிப்படுத்த முயன்ற அவரை நோக்கி சில கரசேவகர்கள் கற்களை வீசியதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

கரசேவகர்களில் ஒரு பிரிவினர் தனியாக பிரிந்து கலவரத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது. மசூதியின் மேல் ஏறியவர்கள் சமூக விரோதிகள் மற்றும் அராஜகர்கள் என்றும் அவர்களை ராம பக்தர்கள் என்று நிச்சயமாக கூற முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த அராஜகர்களை குற்றம் சுமத்தப்பட்டவர்கள்தான் வழிநடத்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ள நீதிபதி ஆகவே, பாபர் மசூதியை இடிப்பதற்கு முன் கூட்டியே சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி தொண்டர்கள் கரசேவகர்களை ஒழுங்குப்படுத்த முயற்சிகள் எடுத்துள்ளது ஆதாரங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி கூறியுள்ளார். ஆகவே, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பாபர் மசூதியை இடிப்பதற்கு திட்டம் தீட்டினார்கள் என்று கூறுவதற்கில்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு நபர் ஒரு குழுவை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் மட்டுமே, அந்தக் குழுவின் சட்டவிரோத நடவடிக்கைக்கு அவரும் பொறுப்பு என்று கூற முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆகவே, குறிப்பிட்ட சில கரசேவகர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் முன்கூட்டியே அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அதன் மூலம் சட்டவிரோதமாக கூடினார்கள் குற்றச்சாட்டு அவர்களுக்கு பொருந்தாது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறுமனே, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினார் என்பதற்காக மட்டும் ஒருவரை தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டார் என்று குற்றம்சாட்ட முடியாது என்றும் ஆத்திரமூட்டும் கோஷங்களை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் முழங்கினார்கள் என்பதற்கு தகுந்த ஆதாரங்களை சிபிஐ தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

ஆதாரங்களாக சிபிஐ தாக்கல் செய்துள்ள வீடியோக்களும், ஆடியோக்களும் திருத்தம் செய்யப்பட்டவை என்பதை சாட்சிகளே ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஆகவே, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாகவோ, இரு பிரிவினருக்கு இடையில் கலவரத்தை தூண்டினார்கள் என்றோ கூறமுடியாது என்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட மேடையில் இருந்த தலைவர்கள் வெறுப்பை தூண்டும் கோஷங்களை எழுப்பினார்கள் என்பதற்கு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒலி நாடாக்களுடன் அவர்களின் உண்மையான குரல் பதிவு ஒப்பிட்டு ஆதாரமாக தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.

அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் கல்யாண் சிங், மத்திய அரசின் படைகளை பயன்படுத்தவில்லை என்பதையும், அவருடைய செயலற்ற தன்மையே மசூதி இடிக்கப்பட காரணம் என்பதையும் நிரூபிப்பதற்கு சிபிஐ எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் அளித்த சாட்சிகள் எதுவும் கல்யாண் சிங் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதாக இல்லை என்று கூறியுள்ள நீதிபதி, காவல்துறை அதிகாரிகள் அளித்த சாட்சியின்படி, அன்றைய தினம் போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடியதால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.

சாட்சியங்களை ஆராய்ந்ததில் சிஆர்பிஎஃப் வீரர்களை பாதுகாப்பிற்காக செல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஃபைசாபாத்திலிருந்து அவர்களால் அயோத்திக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துளளார்.

ஆகவே, கல்யாண்சிங் பாபர் மசூதியை இடிக்க உத்தரவிட்டார் என்பதற்கோ, அதற்காக சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்கோ, இரண்டு பிரிவினருக்கிடையில் கலவரத்தை தூண்டிவிட்டார் என்பதற்கோ ஆதாரம் இல்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை மிகப்பெரிய சட்ட விதி மீறல் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது உண்மைதான் என்று கூறியுள்ள நீதிபதி, ஆனால், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதா என்பதை மட்டுமே இந்த நீதிமன்றம் ஆராய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில், பாபர் மசூதி இடிப்பு சம்பவம் எந்த வித தூண்டுதலும் இல்லாமல் திடீரென்று நடந்த ஒரு நிகழ்வு என்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இதை முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்றும் நீதிபதி எஸ்.கே. யாதவ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்