Aran Sei

பாஜகவின் கைப்பாவை என்ஐஏ: மெஹ்பூபா முப்தி குற்றச்சாட்டு

Credits Scroll

காஷ்மீரில் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் வீடுகள் மற்றும் கிரேட்டர் காஷ்மீர் என்ற செய்தி நாளேட்டின் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தியுள்ளது.

“ஸ்ரீநகர் மற்றும் பந்திப்போராவில் பத்து இடங்களிலும் பெங்களூருவில் ஒரு இடத்திலும் இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.” என்று தேசியப் புலனாய்வு முகமை கூறியுள்ளதாக ஸ்க்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், “என்ஜிஓ என்ற போர்வையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டி, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளுக்காக நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.” எனவும் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியை அந்த அமைப்புகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதாகக் கிடைத்த நம்பகமான தகவலின் பேரில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனை தொடர்பாக காஷ்மீரி டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் அனுராதா பசின், “கிரேட்டர் காஷ்மீர் அலுவலகம் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர் குர்ரம் பர்வெஸ் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தி இருப்பது நம்முடைய சின்ன எதிர்ப்புக் குரல்களையும் ஒடுக்கும் முயற்சியே.” எனக் குற்றம் சாட்டிப் பதிவிட்டுள்ளார்.

 

மேலும், “காஷ்மீரில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்க முடியாது என்ற சட்டத்தை ரத்து செய்த மறுநாள் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டிருப்பது வெறும் தற்செயலான நிகழ்வுதானா?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி, “ஸ்ரீ நகரில் என்ஐஏ நடத்தியுள்ள சோதனை, கருத்துச் சுதந்திரம் மற்றும் மாற்றுக் கருத்துகள் மீது இந்திய அரசு நிகழ்த்தும் கடுமையான ஒடுக்குமுறைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“அதிகாரத்துக்குக் கட்டுப்பட மறுப்பவர்களை அச்சுறுத்துவதற்கான செயலில் ஈடுபட்டு, தேசியப் புலனாய்வு முகமை பாஜகவின் கைப்பாவையாக மாறியிருக்கிறது.” எனவும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்