Aran Sei

” புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பு ஆலோசனை ஒரு கேலிக்கூத்து ” – 10 மைய தொழிற்சங்கங்கள் கண்டனம்

த்திய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்புக் குறியீடுகளும், முன்பு திட்டமிட்ட ஏப்ரல் 1-ம் தேதிக்கு, முன்னரே அமலுக்கு வந்து விடும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர் அபூர்வ சந்திரா கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியம், பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகள் தொடர்பான 29 சட்டங்களை ஒன்று சேர்த்து 4 தொகுப்புக் குறியீடுகளாக மத்திய அரசு மாற்றியுள்ளது.

இந்தத் தொகுப்புக் குறியீடுகளுக்கான விதிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும், அத்துடன் அவை அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனவரி 12-ம் தேதி தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், தொழிற்சங்கங்களுடனும் நிறுவன கூட்டமைப்புகளுடனும், பணியிட பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக தி ஹிந்து செய்தி கூறுகிறது.

ஆனால், இந்தக் கூட்டத்தை 10 மத்திய தொழிற்சங்கங்கள் புறக்கணித்துள்ளன.

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC), ஹிந்த் தொழிலாளர் சங்கம் (HMS), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), அகில இந்திய ஒன்றுபட்ட தொழிற்சங்க மையம் (AITUC), தொழிற்சங்க ஒருங்கிணைப்பு கமிட்டி (TUCC), சுய வேலை செய்யும் பெண்களின் சங்கம் (SEWA), அகில இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய கவுன்சில் (AICCTU), தொழிலாளர் முற்போக்கு முன்னணி (LPF), ஒன்றுபட்ட தொழிற்சங்க காங்கிரஸ் (UTUC) ஆகிய இந்த 10 மத்திய தொழிற்சங்கங்களும், தொழிலாளர் அமைச்சகம் நடத்திய இணைய வழி கூட்டம் ஒரு கேலிக்கூத்து என்று கூறி ஒரு கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன.

“எல்லா நாடாளுமன்ற விதிமுறைகளையும் மீறி, எதிர்க்கட்சிகள் இல்லாமல், முத்தரப்பு ஆலோசனைகளை நடத்தாமல் இந்த தொழிலாளர் குறியீடுகளை நிறைவேற்றியதை நாங்கள் விமர்சித்து வந்திருக்கிறோம். எங்களது எதிர்ப்புகளை கவனத்தில் கொள்ளாமல், முத்தரப்பு ஆலோசனை என்ற கேலிக் கூத்தை அரசு நடத்துகிறது.” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

“அரசின் பல்வேறு மட்டங்களிலும் சரி, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் சரி, பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்களும் சரி நேரில் நடக்கும் போது இது போன்று இணையவழி கூட்டம் நடத்துவது ஒரு கேலிக் கூத்து” என்று அவை விமர்சித்துள்ளன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் ஆதரவிலான பாரதீய மஜ்தூர் சங் (BMS), “முன் வைக்கப்பட்ட வரைவு விதிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் குறியீடுகளின் 80% ஷரத்துகளை புறக்கணித்து விட்டது. அந்த விதிகளை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் தொழிலாளர் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதில்லை என்பது தெரிந்த ஒன்று” என்று விமர்சித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII), “இந்தச் சீர்திருத்தங்கள் தொழில் செய்வதை எளிமையாக்கி, முதலீட்டை ஈர்த்து, பெருமளவு வேலை வாய்ப்பை உருவாக்கும்” என்று புதிய தொகுப்பு குறியீடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்