Aran Sei

புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும் : நரேந்திர மோடி

credit: livemint.com

புதிய கல்விக் கொள்கை நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் போன்று ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்கு வலு சேர்க்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.

செப்டம்பர் 70-ம் தேதி நடைபெற்ற ஆளுநர்களின் மாநாட்டில் உரையாற்றிய மோடி, கல்விக் கொள்கையில் அரசின் தலையீடு “மிக மிகச் சொற்பமாக” இருக்கும் என்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு கல்விக் கொள்கை மற்றும் கல்வி முறை முக்கியமானது என்றும் கூறியுள்ளார். அதேபோல், புதிய கல்விக் கொள்கை வெறும் அரசின் கொள்கை கிடையாது. அது இராணுவம், வெளியுறவு கொள்கை போன்று ஒட்டுமொத்த நாட்டின் கொள்கை என்று கூறியிருக்கிறார்.

புதிய கல்வியை அமல் செய்வதற்கு மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு “கூட்டாகப் பொறுப்புள்ளது” என்று கூறியுள்ள மோடி, புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து தரப்பினரிடமும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஆலோசனைகளை நடத்தும்படி மாநிலங்களை வலியுறுத்தினார்.

கல்விக் கொள்கையில் புதிதாக மாற்றம் கொண்டு வரும்போது பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியுடன் தொடர்புடைய இதர தரப்பினர்களுக்கு சந்தேகங்கள் வருவது இயல்பே என்று கூறிய மோடி, புதிய கல்விக் கொள்கை அறிக்கையில் உள்ள விவரங்கள் அனைத்தும் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களை தீர்த்த பிறகே அது அமல் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் பற்றி பேசும்போது மோடி, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிற்கான தற்சார்பு கொண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் என்றும் நாட்டின் பொருளாதாரத்தை “அறிவுசார் பொருளாதாரமாக” மாற்றும் என்றும் உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில், மத்திய, மாநில அரசுகள் கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். இந்தியாவில் கல்விக்கு செய்யப்படும் முதலீடு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 0.7 விழுக்காடு அளவில்தான் இருக்கின்றது என்றும் இது அமெரிக்காவில் 2.8 விழுக்காடாகவும் தென் கொரியாவில் 4.2 விழுக்காடாகவும் இஸ்ரேலில் 4.3 விழுக்காடாகவும் இருக்கின்றது என்று சுட்டிக் காட்டினார்.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறிய ராம்நாத் கோவிந்த், இந்த இலக்கு முதன்முதலில் 1968-ம் ஆண்டு கல்விக் கொள்கையில் கூறப்பட்டது. அப்போதில் இருந்து அடைய முடியாத இலக்காக இது இருக்கிறது என்றும் ஒரு சமூகத்தை உண்மையாக மேம்படுத்துவதற்கு கல்வியில் முதலீடு செய்வதை விட சிறந்த வழி கிடையாது என்றும் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்