Aran Sei

புதிய கல்விக் கொள்கை: வேண்டும் சிறப்பு தீர்மானம்

ன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதிக்க சிறப்பு கூட்டத்தை நடத்தாதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை 2020 குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உரையில், புதிய கல்விக் கொள்கை மும்மொழி திட்டத்தை திணிக்க முயலுகிறது. பேரறிஞர் அண்ணாவால் தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடைமுறையில் உள்ள இரு மொழி கொள்கைக்கு அது முற்றிலும் விரோதமானது என்று உரையாற்றினார்.

புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்றும் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளுக்கு உரிய இடம் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் கல்விமுறையை சீர்க்குலைக்கும்படி 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குலக்கல்வி திட்டத்தின் மறு வடிவம் என்று ஸ்டாலின் காட்டமாகப் பேசியுள்ளார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புதியக்கல்வி கொள்கை வரைவு குறித்து முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமிழகம் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறது என்பதையும், 10+2 என்ற கல்வி முறையை மாற்றி அமைப்பது சரியாக இருக்காது என்பதையும் குறிப்பிட்டிருப்பதாக கூறினார்.

பாடத்திட்டத்தை மாற்ற ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மும்மொழி கொள்கையை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் சமூக நீதிக்கும் கூட்டட்சி தத்துவத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி செங்கோட்டையன் பதிலளித்தார்.

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கும் பட்சத்தில், சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி ஏன் சிறப்பு தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து, கல்விக்கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு செய்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்