Aran Sei

புதிய கருத்தொற்றுமையை நோக்கி இந்திய-சீன எல்லைத் தகராறு

credit: livemint.com

 

மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்திற்கிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ-ம் சந்தித்துக் கொண்டனர்.

கடந்த சில மாதங்களாக இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றநிலையை தனிப்பது பற்றியும் இந்திய-சீன உறவுகள் பற்றியும் ஆக்கப்பூர்வமான செய்திகளை அமைச்சர்கள் இருவரும் மனம் திறந்து விவாதித்தனர் என்று இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்ட செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது. எல்லை பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் கருத்தொற்றுமையை எட்டியிருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஏற்கெனவே, இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையில் ஏற்பட்ட கருத்து ஒற்றுமைகளை வழிக்காட்டுதலாகக் கொண்டு இந்திய சீன உறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை அணுக வேண்டும் என்றும் குறிப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் கருத்து வேறுபாடுகள் தகராறாக மாற அனுமதிக்கக்கூடாது என்றும் இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதை செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.

எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு நாட்டு படைகளுக்கிடையில் பேச்சுவார்த்தை தொடரும் அதேவேளையில் இரு நாடுகளும் தங்களது படைகளை உடனடியாக விலக்கிக் கொள்ளவதுடன் எல்லையில் இந்திய சீன படைகள் முறையான இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்திய சீன எல்லையில் பதற்றத்தை மட்டுப்படுத்த இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர் என்றும் இந்திய சீன எல்லை தொடர்பாக ஏற்கெனவே, உள்ள ஒப்பந்தங்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. அதேபோல், எல்லையில் அமைதியையும் சமாதானத்தையும் பராமரிப்பதுடன் நிலைமையை மோசமாக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும் இரு நாட்டு அமைச்சர்கள் உறுதியளித்துள்ளதை அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்திய சீன எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 2003-ம் உருவாக்கப்பட்ட சிறப்பு பிரதிநிதித்துவ முறையை பின்பற்றி பேச்சுவார்த்தைகள் மற்றும் செய்தி பரிமாற்றங்கள் தொடரும் என்றும் 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்திய-சீன எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு முறை தனது செயல்பாடுகளை தொடரும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்திய சீன எல்லை பகுதியில் நிலைமை சீரான பிறகு இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுவந்த நம்பிக்கை உருவாக்கும் நடவடிக்கைக விரைந்து முடிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன என்று இந்தியா மற்றும் சீனா இணைந்து வெளியிட்ட செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்