Aran Sei

பேச்சு வார்த்தை முடிந்தபின்பே கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசு

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான காற்றின் தரம் தொடர்பான தண்டனைச் சட்டத்தில் இருந்து விவசாயிகளை விலக்குவது என்று ஒரு உடன்பாட்டை கடந்த பேச்சுவார்த்தையில் எட்டிய போதிலும், மற்ற கோரிக்கைகளும் தீர்க்கப்படும் வரை, அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் (டிசம்பர் 30) நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட உடன்படிக்கைகள் எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த விவசாய துறை அமைச்சக அதிகாரிகள், “விவசாயிகள் சங்கங்களுடனான பேச்சு வார்த்தையின் போது எடுக்கப்பட்டது ‘கொள்கை அடிப்படையிலான’ உடன்பாடு மட்டுமே.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை – நடந்தது என்ன?

“பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், இறுதி கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்ததும், விவசாயிகளோடு ஏற்பட்ட உடன்படிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான விவாதம் நடைபெறும்.  அவர்களின் இரண்டு கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டது ஒரு  கொள்கை ரீதியான முடிவு மட்டுமே.” என்று விவசாயத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தி இந்து விடம் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அவை அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு நம்பிக்கை தருவதாக அமையும் என்றும் அதேநேரம், மூன்று விவசாய சட்டங்களை ரத்துசெய்தல், விவசாய விளைப்பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குதல் போன்ற தீர்க்கப்படாத கோரிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இவை சிறிய கோரிக்கைகள்தான் என்றும் விவசாயிகள் சங்க தலைவர்கள்  கூறியுள்ளதாக தி இந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசோடு பேச்சுவார்த்தைக்குத் தயார் : நான்கு அம்ச கோரிக்கையை முன்மொழியும் விவசாய சங்கங்கள்

“அரசிடமிருந்து வாய்மொழியில் மட்டுமே தீர்வுகள் வருகிறது. எங்களுக்கு எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் அவர்கள் காற்று தரம் தொடர்பான கோரிக்கையில் எளிதில் நடவடிக்கை எடுக்க முடியும். விவசாயிகளுக்கு அந்தச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தினால் போது. முதலில் மத்திய அரசு இதைச் செய்யட்டும்.” என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாயிகள் சங்கமான பாரதிய விவசாயிகள் சங்கத்தின் (டிக்காய்டின்) பொதுச் செயலாளர் யுத்வீர் சிங் கூறியுள்ளார்.

“அரசு என்ன சொன்னதோ, அதை அவர்கள் முதலில் செய்யட்டும். ஆனால் இது ஒரு பகுதி பிரச்சினை மட்டுமே. எங்கள் முக்கிய கோரிக்கை மூன்று சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே. உண்மையில், கடந்த பேச்சுவார்த்தையில் நடந்தது ஒரு சதவீதம் முன்னேற்றம் மட்டுமே. 99 சதவீத பிரச்சனைகள் அப்படியே தான் இருக்கிறது. ” என்று அகில இந்திய விவசாயிகள் சபையின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா குறிப்பிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்