Aran Sei

ராம்விலாஸ் பாஸ்வானின் மரணத்தில் சர்ச்சை – பிரதமருக்குக் கடிதம்

ராம்விலாஸ் பாஸ்வானுடைய மரணம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்சா கட்சி கடிதம் எழுதியுள்ளது.

அக்டோபர் 8-ஆம் தேதி மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனுமாகிய சிராக் பஸ்வான் தனது தந்தையின் மரணத்திற்கு ஒரு நாள் கழித்துச் செய்தி ஒன்றை வெளியிடுவதற்காக ஒத்திகை பார்த்ததாகக் கூறப்படும் காணொலி தற்போது வைரலாகியுள்ளது.

வைரலாகும் சிராக் பஸ்வான் வீடியோ – பீகார் தேர்தல் பரபரப்பு

இந்நிலையில், ராம்விலாஸ் பாஸ்வானுடைய மரணம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்சா (செக்யூலர்) கட்சியின் தேசியச் செய்தி தொடர்பாளர் டாக்டர்.தானிஸ் ரிஜ்வான் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ”நாட்டின் மிகப்பெரிய தலைவரும், உங்கள் கூட்டணிக் கட்சி தலைவருமான  ராம்விலாஸ் பாஸ்வான் நம்மைவிட்டுச் சொர்க்கலோகத்தை அடைந்துவிட்டார். அவருடைய மரணத்தால் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சோக அலை பரவியது. இன்றும் எங்களைப் போன்றோர் அவரை நினைத்துத் துக்கமடைகிறோம்.” என்று ராமவிலாஸ் பாஸ்வானின் மறைவைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

சமூக நீதி அரசியல் – பீகாரில் ஒரு சகாப்தத்தின் முடிவு

சிராக் பாஸ்வானின் செயலைப் பற்றிக் குறிப்பிடும் போது, ”மொத்த நாடே சோகத்தில் மூழ்கியிருக்கும் போது, அதற்கு மாறாக, லோக் ஜனசக்தியின் தேசிய தலைவர் சிராக் பாஸ்வான், (தந்தையின்) இறப்பிற்கு இரண்டாவது நாளிலேயே சூட்டிங்கில் சிரித்த முகத்தோடு மட்டுமல்ல; கட்-டூ-கட் சூட்டிங் செய்வதைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்.” என்று சுட்டிக்காட்டுகிறார்.

இதனால், ராம்விலாஸ் பாஸ்வானின் தொண்டர்கள் மற்றும் உறவினர்களிடையே பல்வேறு கேள்விகள் எழத்தொடங்கியிருக்கின்றன என்றும், அவரின் மரணத்தோடு தொடர்புடைய பல்வேறு கேள்விகளும் தன்னியல்பிலேயே சிராக் பஸ்வானை நோக்கித் திரும்புகிறது என்றும் கூறியுள்ளார்.

’ராம்விலாஸ் பாஸ்வான் என்னும் தலித் ராமன்’ -ஆனந்த் டெல்டும்டே

மேலும், “மத்திய அமைச்சர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்த போது, யாருடைய கட்டளையின் காரணமாக மருத்துவமனை அவரது உடல்நிலையைக்  குறித்த அறிக்கையை வெளியிடவில்லை? இவை தவிரவும் எழும் பல்வேறு கேள்விகளுக்கான விடையை ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களுடைய உறவினர்களும் தொண்டர்களும் வேண்டி நிற்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக, ”தங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம், மேற்கண்ட கேள்விகளைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கும்வண்ணம், ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களுடைய மரணம் தொடர்பாக நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் கடிதத்திற்கு எதிர்வினையாற்றும் வகையில் சிராக் பாஸ்வான், ”ஒரு மகனைப் பற்றி இதுபோன்ற விஷயங்களைப் பேசுபவர்கள், தங்களை நினைத்து தாங்களே வெட்கப்பட வேண்டும். எனது தந்தையின் உடல்நிலை குறித்து மஞ்சி ஜியிடம் தொலைபேசியில் கூறினேன். ஆனால் அவர் ஒருதடவைக்கூட என் நோயுற்ற தந்தையைப் பார்க்க வரவில்லை” என்று கூறியுள்ளதாக ‘ஏஎன்ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.

பீகாரின் முதல் கட்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவிற்குச் சில மணி நேரத்துக்கு முன் இந்தக் காணொலி வெளியானதால் சிராக் பாஸ்வான் கவலை அடைந்துள்ளார். இந்தக் காணொலி வெளியானதில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் பங்கிருக்கக்கூடும் என்று சிராக் குற்றம் சாட்டியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்