Aran Sei

” வங்கி ஊழியர் போராட்டம் விவசாயிகளின் போராட்டப் பாதையை பின்பற்றும் “- சங்கத் தலைவர் எச்சரிக்கை

Image credit : hindustantimes.com

த்திய அரசின் தனியார் மயமாக்கலையும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையையும் எதிர்த்து  வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்கிறது.

கடந்த நவம்பர் மாதம் முதல் 110 நாட்களாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தைப் போன்ற வடிவத்தை இந்தப் போராட்டம் எடுக்கும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

சென்ற மாதம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கப் போவதாக அறிவித்த பின்னணியில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. முன்னதாக, ஐடிபிஐ வங்கியில் பெரும்பான்மை பங்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு விற்றிருந்தது.

அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் – வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வேலை நிறுத்தப் போராட்டத்தின் முதல் நாளில் வங்கி ஊழியர்கள், தெருக்களில் இறங்கி முழக்கம் எழுப்பியும், பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும் வங்கி தனியார் மயமாக்கலுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

ராஜஸ்தான் ஆழ்வார் நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்கள்

உதவி மேலாளர்கள், மேலாளர்கள், மூத்த மேலாளர்கள் மட்டங்ககளில் வேலை நிறுத்தத்தில் 100 சதவீத பங்கேற்பு இருந்ததாக வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக பிடிஐ கூறியுள்ளது. 80 முதல் 90 சதவீதம் கிளைகள் இவர்களால் நடத்தப்படுகின்றன என்று ஒரு வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.

மூன்று தேசிய மையங்களான சென்னை, மும்பை, டெல்லி ஆகியவற்றில் பொதுத்துறை வங்கிகளில் ரூ 16,500 கோடி மதிப்பிலான 2.01 கோடி காசோலைகளை கையாள்வது முடங்கியுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சஙகத்தின் தலைவர் சி எச் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். மேலும், பணம் எடுத்தல், பணம் போடுதல், பணம் அனுப்புதல் போன்ற பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கிகள் – ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு திருமாவளவன் ஆதரவு

அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சௌம்யா தத்தா, உச்சமட்ட அதிகாரிகளைத் தவிர அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக கூறியுள்ளார்.

மும்பை அந்தேரியில் பிரச்சாரம்மும்பை அந்தேரியில் பிரச்சாரம்

அரசின் கொள்கைகள் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கப்படும் என்றும் அது தற்போது நடந்து வரும் 5 மாநில தேர்தல்களில் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு செவி மடுக்கா விட்டால், எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்துவோம், அது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தின் பாதையை பின்பற்றும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்