Aran Sei

தேசிய மக்கள்தொகை பதிவேடு – இணைய வழியில் தகவல்களை திரட்ட மத்திய அரசு திட்டம்

image credit - indianexpress.com

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான விபரங்களை இணைய வழியில் பதிவு செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வீட்டுக்கு வீடு மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இந்த விபரங்களை, நாட்டு மக்கள், இணைய வழி பதிவு செய்யலாம். பதிவு செய்த பிறகு கிடைக்கும் ஒரு அடையாள எண்ணை, மக்கள் தொகை கணக்கெடுக்க வருபவரிடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான மொபைல் செயலியில், தகவல் கொடுத்தவரின் விபரங்கள் காண்பிக்கப்படும், அவை எதிர்கால பயனுக்காக ஒரு கணினியில் சேமிக்கப்படும். எந்த விதமான “உடல் அடையாளங்களும், ஆவணங்களும்” பெறப்பட மாட்டாது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, சென்ற ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கவிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ 3,678 கோடி ஒதுக்கியிருந்தார். தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படா விட்டாலும், 2019-20 நிதியாண்டில் அதற்காக ரூ 3,941 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றின் முதல் கட்டத்தில் 2019-ல் நடந்தமுன் சோதனையில், 30 லட்சம் பேரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 20 வரை நடத்தப்பட்டது.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு திரட்டப்படும் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், 2019-ல் நடத்தப்பட்ட முன் சோதனையில், அப்பா அம்மா ஆகியோரின் பிறப்பிடம் பிறந்த தேதி, கடைசியாக வசித்த இடம், தாய்மொழி, ஆதார் எண் (விரும்பினால்), வாக்காளர் அடையாள அட்டை, மொபைல் எண், ஓட்டுனர் உரிம எண் ஆகியவை கேட்கப்பட்டன.

இந்தக் கேள்விகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கவலை தெரிவித்திருந்தன என்று தி ஹிந்து செய்தி கூறுகிறது. தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பை பல மாநில அரசுகளும் குடிமை அமைப்புகளும் எதிர்த்தன.

2010-லும், 2015-லும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு 14 விபரங்கள் மட்டுமே திரட்டப்பட்டன. அவற்றில் 119 கோடி குடிமக்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

குடியுரிமை விதிகள் 2003-ன் கீழ், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆனது இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டுடன் (NRIC) அல்லது தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் (NRC) இணைக்கப்படுகிறது.

2019-ம் ஆண்டில் மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) முஸ்லீம்களை குடியுரிமை பெறுவதிலிருந்து விலக்கி வைக்கிறது. அதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆவணங்கள் இல்லாதவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவராக இருந்தால், இந்திய குடியுரிமை கோரலாம்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு மூலம் திரட்டப்படும் விபரங்களின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும், குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட நிலையில் அது முஸ்லீம்களுக்கு எதிரானதாக பயன்படுத்தப்படும் என்றும்  பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம்களை விலக்கி வைக்கும் அந்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டங்களின் போது 69 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “காலவரிசையை புரிந்து கொள்ளுங்கள். முதலில் குடியுரிமை சட்ட மசோதாவை கொண்டு வருவோம். அதன் பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவோம். தேசிய குடிமக்கள் பதிவேடு வங்காளத்துக்கு மட்டும் இல்லை, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்” என்று பேசியிருந்தார்.

மார்ச் 2020-ல், மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த உறுதி பத்திரம் ஒன்றில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிப்பது, “குடிமக்கள் அல்லாதவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கு குடிமக்களை அடையாளம் காண்பது எந்த ஒரு இறையாண்மை கொண்ட நாட்டுக்கும் அவசியமானது” என்று கூறியிருந்தது.

“சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அல்லது கண்டுபிடித்து அதன் பிறகு சட்டரீதியான நடைமுறையை பின்பற்றுவது” மத்திய அரசின் பொறுப்பு என்று அது கூறியிருந்தது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் டிசம்பர் 9-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பின்னணியை தயாரிப்பதற்கான எந்தத் தேவையும் இல்லை. இந்த நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்கள் தேர்தல் அறிக்கைதான் அந்த பின்னணி” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்