Aran Sei

“வேத கலாச்சாரம், முகலாயர்கள் அன்னியர்கள்” – வரலாற்றை மாற்றச் சொல்லும் வலதுசாரிகள்

Image Credit : frontline.thehindu.com

ல்வி சீர்திருத்தம் தொடர்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், கல்வித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்பு வலதுசாரி அமைப்பினரும் கல்வியாளர்களும் தமது பரிந்துரைகளை முன் வைத்தனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நிலைக்குழுவின் முன் கருத்துக்களை முன் வைத்தவர்களில், 1999 முதல் 2004 வரை, வாஜ்பாயி தலைமையிலான மத்திய அரசின் கீழ், பள்ளி புத்தக வரலாற்றில் மதவாதத்தை புகுத்துவதாக குற்றம் சாட்டப்பட்ட ஜே.எஸ் ராஜ்புட்டும் இடம்பெற்றிருந்தார்.

“வரலாற்று ஆதாரம் இல்லாத தகவல்களையும், நமது தேசிய நாயகர்கள் பற்றிய திரிபுகளையும்” நீக்குவது என்பது கூட்ட நிகழ்ச்சி நிரலாக இருந்தது. மேலும் “இந்திய வரலாற்றின் அனைத்து காலகட்டங்கள் பற்றியும் சமமான, விகிதாச்சார அளவிலான பகுதியை உறுதிபடுத்துவதும்” இந்திய வரலாற்றில் மகத்தான பெண்களின் பங்களிப்பை சேர்ப்பதும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தது.

“ஒரு நாடாளுமன்ற குழு மட்டத்தில் பாடப் புத்தக திருத்தங்கள் குறித்த விவாதம் நடந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இப்போது புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டு புதிய பாடப் புத்தகங்கள் எழுதப்பட்டு வருவதால் அதில், நாடாளுமன்ற நிலைக்குழுவும் பங்கேற்க முடிவு செய்தோம்” என்று குழுவின் தலைவரும், மூத்த பாஜக தலைவருமான வினய் சஹஸ்ரபுத்தா தி இந்து -விடம் தெரிவித்துள்ளார்.

புதன் கிழமையன்று, ஜே.எஸ் ராஜ்புட், ஷங்கர் ஷரண் ஆகிய கல்வியாளர்களும், பாரதிய ஷிக்-ஷண் மண்டல், ஷிக்-ஷா சன்ஸ்கிருதி நியஸ் ஆகிய வலது சாரி அமைப்புகளும் தமது கருத்துக்களை நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் வைத்தனர்.

முகலாயர் காலத்துக்குக் கொடுக்கப்படும் இடம் இந்து மன்னர்களுக்குக் கொடுக்கும் இடத்தோடு சமன் செய்யப்பட வேண்டும் என்றும், பிரிட்டிஷ் ஆட்சி செய்த 200 ஆண்டுகள் மட்டும்தான் அந்நியர் ஆட்சி இருந்ததாக, வரலாறு பொய்யாக எழுதப்பட்டிருப்பதாகவும், அதற்கு முந்தைய 1000 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.

முகலாயர் காலத்தை பூசி மெழுகி, அவர்களது படையெடுப்பாளர் என்ற பாத்திரம், பேசப்படாமல் மறைக்கப்படுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குழந்தைகளுக்கு “வேத காலம்” முதலான இந்திய கலாச்சாரத்தை கற்பிக்க வேண்டும் என்று, இரண்டு வலதுசாரி அமைப்புகளும் கூறியுள்ளனர். இந்திய பாடப் புத்தகங்களில் மார்க்சிய வரலாற்றாசிரியர்களின் தாக்கம், சரிசெய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“இன்றைய (13.01.21) கூட்டத்தில் எந்த உறுப்பினரும் மறுப்பு கேள்விகளை எழுப்பவில்லை. ஏனென்றால், இவை வெறும் வாக்குமூலங்கள்தான். அவர்களது நிலைப்பாடுகளை சரிசெய்ய வேண்டிய தேவை இப்போது இல்லை” என்று குழுவின் ஒரு உறுப்பினர் தெரிவித்துள்ளதாக தி இந்து தெரிவிக்கிறது.

தேசிய பாடப் புத்தகங்கள் கவுன்சில், பாடப் புத்தகங்களை புதுப்பித்து வருகிறது.

இந்திய வரலாற்றைத் திருத்தி, வரலாற்று ஆதாரமில்லாத மதவாத பார்வையிலான கருத்துக்களை புகுத்துவதில் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான வலதுசாரி சக்திகள் எடுக்கும் முயற்சிகளை, ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்றுத் துறை அறிஞர்களும், பேராசிரியர்களும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்