Aran Sei

“இதற்கு, எஸ்.எம்.எஸ்-சிலேயே நாடாளுமன்றத்தை நடத்தலாம்” – சு.வெங்கடேசன் எம்.பி

credits: thenewsminute.com

நடந்துவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நீட் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரிடம் அரண்செய் சில கேள்விகளை முன்வைத்தது…

விவசாய மசோதாக்களை எதிர்த்த 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து உங்களுடைய கருத்து?

இது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது. மசோதா தாக்கல் செய்யும்போது ஒரே ஒரு உறுப்பினர் கேட்டாலும்கூட வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். நேற்று பல உறுப்பினர்கள் வேளாண் மசோதாக்களுக்கு வாக்கெடுப்பு நடத்தக் கோரினார்கள்.

ஆனால், துணை சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு செய்யப்போவதாக அறிவித்து, யார் கை உயர்த்துகிறார்கள் என்பதை நிமிர்ந்து கூட பார்க்காமல், கீழே குனிந்து மைக்கைப் பார்த்தபடி மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விதிகளுக்குப் புறம்பாக துணை சபாநாயகர் நடந்துகொண்டார். அது குறித்து உறுப்பினர்கள் புகார் அளித்ததால், அவர்களை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள்.

அவசரமாக மசோதாவை நிறைவேற்ற காரணம் என்ன?

மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை என்பதால் திட்டமிட்டு உடனடியாக மசோதாக்களை நிறைவேற்றியுள்ளனர். அவை ஒரு மணிநேரம் தள்ளி வைக்கப்பட்டதால், நாளையேனும் விவாதிக்கலாம் என்று காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத் கோரியதையும் தவிர்த்துள்ளனர்.

இது, நாடாளுமன்ற மரபை காலில் போட்டு மிதிக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். இடை நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று இரவு முழுக்க போராட்டத்தை தொடர உள்ளார்கள்.

இந்த இடைநீக்கம் என்பதே விதிகளுக்கு எதிரானதுதான்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நீக்கப்பட்டிருப்பதன் பாதிப்புகள் என்ன?

கேள்வி நேரம் இல்லாவிட்டால், துறைகள் பற்றிய அரசின் கண்ணோட்டம் எதுவுமே வெளியில் வராது. அரசு தன்னிச்சையாக செயல்படும். அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ள முடிகிற ஒரே வாய்ப்பினையும் தட்டி பறித்துள்ளனர். நாடாளுமன்றம் செயல்பட அவசியப்படும் மிக உயிர்ப்பான நடவடிக்கையை ரத்து செய்துள்ளார்கள்.

கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக இந்த அரசாங்கம் கட்டமைக்கப்படுகிறது.

கேள்வி நேரம் நீக்கப்பட்ட கூட்டத்தொடரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி அணுகுகிறது?

பூஜ்ஜிய நேரம் போன்ற எல்லா வாய்ப்புகளையும் நாங்கள் முழுமையாக பயன்படுத்தி வருகிறோம். ஒரு எம்.பி நாளொன்றுக்கு அதிகபட்சம் ஐந்து கேள்விகள் கேட்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவையில் உள்ள எல்லா உறுப்பினர்களின் கேள்விகளும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.

230 கேள்விகள் மட்டுமே ஒரு நாள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு கேள்வி மட்டுமே தேர்வு செய்யப்படுகிறது. ஒருமுறை மட்டும் இரண்டு கேள்விகள் தேர்வாகின.

கேள்விகளை தேர்வு செய்ய என்ன வழிமுறை பின்பற்றப்படுகிறது?

அது குறித்து ஒன்றும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, மத்திய அரசு முன்வைத்துள்ள அவசர சட்டங்களுக்கும், மசோதாக்களுக்கும் எதிர்க்கட்சிகளிடம் எந்த ஆலோசனையும், கருத்தும் கேட்கவில்லை.

எனில், இந்தக் கூட்டதொடரின் அவசியம்தான் என்ன? வெறும் எஸ்.எம்.எஸ். போதுமே? இத்தனை மசோதாக்களை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கலாமே? எதுக்கு வரச்சொல்லி நேரத்தை வீணடிக்கனும்?

எந்த மசோதாவையும் விவாதிக்க முடிவதில்லை. ஒரு மசோதா குறித்து வெறும் ஒரு மணிநேரத்தில் எல்லா உறுப்பினர்களும் எப்படி பேச முடியும்? நாட்டின் 130 கோடி மக்கள்தொகை சம்பந்தப்பட்ட மூன்று விவசாய மசோதாக்கள் குறித்து ஒட்டுமொத்தமாக பத்து நிமிடங்கள் மட்டும் பேச அனுமதித்தால் என்ன பேசிவிட முடியும்?

சட்டம் இயற்றுகின்ற பகுதி, பெரும்பான்மை என்ற அராஜகத்தால் அழிக்கப்பட்டு வருகிறது.

உங்களுடைய கேள்விகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

வெகுவான மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்தே எனது கேள்விகள் இருக்கும். இதுவரை நான் கல்வி குறித்து கேட்ட கேள்விகளில் ஒன்று கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.

புதிய கல்வி கொள்கை குறித்து பல கேள்விகள் கேட்டிருக்கிறேன். ஒன்று கூட பதிலளிக்கப்படவில்லை. நான் கேட்டிருக்கும் அத்தனை கேள்விகளுமே மிக முக்கியமானவை. என்னுடைய எந்த கேள்விக்கு பதில் கூறினாலும் அரசுக்கு சிக்கலே. எப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது.

நேர்காணல்: குழலி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்