Aran Sei

`சமத்துவ அணுகுமுறை இல்லை’ – எம்.பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Credits: News Minute

தமிழகத்தில் சிஆர்பிஎஃப் தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

24 துணை மருத்துவப் பணிகளுக்கான மத்திய ரிசர்வ் காவல் படைத் தேர்வுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம் கூட அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்துறை அமைச்சர் மற்றும் சிஆர்பி எஃப் இயக்குனருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தத் தேர்வுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் நலன் கருதி தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்த கடிதம் கீழ்வருமாறு:

”மத்திய ரிசர்வ் காவல் படையின்( CRPF) துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனங்களுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ளவர்களின் பிரச்சினையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகிறேன்.

மத்திய ரிசர்வ் காவல் படை 24 துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனத் தேர்வு முறைமைக்கான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குரூப் “பி” மற்றும் குரூப் “சி” அமைச்சுப் பணி அல்லாத (Non ministerial), பதிவிதழில் இடம் பெறாத, மோதல் முனைகளில் பணி புரிகிற அகில இந்தியப் பணிகளுக்கானவை ஆகும்.

விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக 31.8.2020 அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்த காலியிடங்கள் 780 ஐ விட அதிகம். எழுத்து தேர்வு 20.12.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கையில் தேர்வு மையங்கள் 9 இடங்களில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தலா 1 இடமும் அமைந்துள்ளன. வட மாநிலங்களில் 5 மையங்கள் அமைந்திருப்பதில் தவறில்லை.

ஆனால் சமத்துவ அணுகுமுறை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இல்லை என்பதே பிரச்சினை. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது.

இத்தகைய சமத்துவமற்ற பங்களிப்பு, தமிழக, புதுச்சேரி விண்ணப்பதாரர்களை மிகப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கும். அதிலும் குறிப்பாக இன்றைய கோவிட் 19 சூழல், மக்களின் நகர்வுகளுக்கு இருக்கிற பிரச்சினைகள் ஆகிய பின் புலத்தில் மேற்கண்ட பணிகளுக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான தடைகளாக மாறக் கூடாது.

ஆகவே, தேர்வு மையங்களை அதிகரித்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கான சம பகிர்வை உறுதி செய்ய வேண்டுகிறேன். தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்த பட்சம் 1 மையத்தை இவ்விரு பகுதிகளிலும் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் மறு அறிவிக்கை வெளியிட்டு, மாற்றங்களின் காரணமாக, அதன் தேதியிலிருந்து கூடுதல் ஒரு மாத அவகாசம் வழங்கி புதிய விண்ணப்பங்களையும் வரவேற்குமாறு வேண்டுகிறேன்.

இப்பிரச்சினையின் நியாயத்தை ஏற்று சாதகமான முடிவை விரைவில் எடுக்குமாறு வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், நாட்டின கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 16 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு குறித்து அறிவிக்கப்பட்டது.

குழுவில் பன்முகத்தன்மை இல்லாததால் ஆய்வுக்குழு கலைக்கப்பட வேண்டும் என எம்.பி சு.வெங்கடேசன் ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

 

”இந்தக் குழுவில் தென்னிந்தியர்கள், வடகிழக்கு இந்தியர்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இடம்பெறவில்லை. உயர் சாதியினர் மட்டுமே இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், உயர் சாதியைச் சார்ந்தவரே இந்தக் குழுவிற்குத் தலைவராக உள்ளார். ஏன் விந்தியாவிற்கு கீழே இந்தியா இல்லையா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை என்பது குறித்து அக்டோபர் 6-ம் தேதி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறை வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் உட்பட செம்மொழிகள் அனைத்தையும் சேர்த்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்