Aran Sei

எம்.பி.களின் சம்பள குறைப்பு: நிறைவேறியது சட்டம்

டப்பு ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 30 விழுக்காடு குறைப்பதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் வழியாக நிறைவேற்றப்பட்டது.

இந்த வார தொடக்கத்தில், மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், நல்கை மற்றும் ஓய்வூதியம் (திருத்த) மசோதா 2020, நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு ஏபரல் 6 நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஓய்வூதியம் தொடர்பான அவசர சட்டத்தை இந்த மசோதா மாற்றீடு செய்யும்.

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் போன்றவற்றை 30 விழுக்காடு குறைக்கும் சட்டமும் அமைச்சர்களின் சம்பளம் போன்றவற்றை குறைக்கும் சட்டமும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த இரு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டது.

கொரோனா காலத்தில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருமான நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்த இரண்டு மசோதாக்களும் கொண்டு வரப்பட்டன என்று அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.

இந்த இரண்டு மசோதாக்கள் மீது நடந்த விவாதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதை பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த இரு மசோதாக்களின் உள்ளடக்கம் ஒன்றாக இருப்பதினால், அவற்றின் மீது கூட்டாக விவாதம் நடைபெறும் என்று மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஹரிவனேஷ் தெரிவித்தார்.

விவாதத்தை தொடங்கி வைத்த காங்கிரஸ் உறுப்பினர் ராஜிவ் சத்தவ், உறுப்பினர்களின் சம்பள குறைப்பை ஆதரிப்பதாக தெரிவித்தார். மக்களுடைய நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்திருப்பது பற்றி கேள்விகளை எழுப்பினார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சிகள், மத்திய அரசின் மோசமான மேலாண்மைக்கான உயிரோட்டமான எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார்.

மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பள குறைப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ரத்து செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

இது குறித்து நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகல்லாத் தோஷி, இந்த இடை நிறுத்தம் தற்காலிகமானது என்று கூறினார்.

திமுக உறுப்பினர் பி.வில்சன், இந்த நடவடிக்கை மூலமாக அரசு வெறும் ரூ.4 கோடியை மட்டுமே மிச்சப்படுத்த முடியும் என்று கூறினார்.

அதற்கு தோஷி, ஈகை செய்வது முதலில் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்று கூறினார். இந்த நடவடிக்கை அரசுக்கு 53.9 கோடியை இந்த ஆண்டு மிச்சப்படுத்தும் என்று திமுக உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்தார்.

புல்லட் ரயில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தோஷி, முதலில் நீங்கள் பொது செலவை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறினீர்கள். இப்போது இந்த திட்டங்களை நிறுத்த சொல்கின்றீர்கள் என்றார்.

அதிமுக உறுப்பினர் ஏ.விஜயகுமார், சம்பள வெட்டு நடவடிக்கையை ஆதரித்து, தொகுதி மேம்பாடு நிதிக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு தங்கு தடை இன்றி நிதி வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் திருவேதி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு கொண்டு வரப்பட்ட இந்த மசோதாக்கள் பற்றி வாட்ஸ் அப் குழுவில் முடிவெடுத்தனர் என்று குற்றம் சாட்டினார்.

விஷம்பார் பிரசாத் நிஷாத் (சமாஜ்வாதி), வி.விஜய்சாய் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்) கே. சோமபிரசாத் (சிபிஎம்) ஃபாசியா கான் (தேசியவாத காங்கிரஸ்), பீர் சிங் (பகுஜன் சமாஜ்), நசீர் அகமது லாவே (மக்கள் ஜனநாயக கட்சி) உள்ளிட்ட உறுப்பினர்களும் சம்பள வெட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்