Aran Sei

மோடி அமெரிக்க வகை ஜனாதிபதியாக இருந்தால் என்ன நடக்கும்? – பானு தமீஜா

Image Credits: The Indian Express

மெரிக்காவின் அரசு வடிவத்தை ஒத்த ஒரு அமைப்பின் கீழ் ஆட்சிபுரிவது போல் பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டை நடத்துகிறார் என்று பல இந்தியர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான நம்பிக்கை. உண்மையில், அவரது அரசாங்கம் பாராளுமன்றத்தைச் சிதைத்துவிட்டது. ‘திறமையான நிர்வாகத்தை’ வழங்குவதற்காக அனைத்தையும் முற்றிலும் மையப்படுத்தியது.

இதன் மூலம், அவர் விரைவான, தைரியமான முடிவுகளை எடுக்க முடியும் மற்றும் அவற்றை ஒப்புதலின்றி செயல்படுத்த முடியும். இதனால் அவர் ‘வலிமையான தலைவர்’ என்று அழைக்கப்படுகிறார்.

அவரது எதேச்சதிகார நடத்தை நிதர்சனமாகிவிட்டது. மோடி, பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் சட்டங்களை இயற்றியுள்ளார்; பாராளுமன்ற கேள்வி நேரத்தை ரத்து செய்துள்ளார்; ரகசியமாகப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து திட்டம் தீட்டியுள்ளார்; நான்கே மணி நேர அவகாசத்தில் கொரோனா பொது முடக்கத்தை அறிவித்துள்ளார்; பிஎம் கேர்ஸ் நிதி குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்; அரசியல் பங்களிப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை… இந்தப் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

இந்திய நாடாளுமன்ற அமைப்பின் வடிவம் மோசமடைந்துள்ளதால் மோடியால் இவற்றைச் செய்ய முடிகின்றது. இது இயல்பாகவே அதிகாரத்தை மையப்படுத்துகிறது. பிரதமர் அலுவலகத்துடன் நிர்வாகம் மற்றும் சட்டமன்ற அதிகாரங்களை இணைக்கிறது. ‘செயல்திறனை மேம்படுத்துதல்’ எனும் பெயரில் இது செய்யப்படுகிறது. இதனால் விரும்பும் சட்டங்களை இயற்ற முடியும் மற்றும் அதை நிறைவேற்ற சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற முடியும்.

இது அவரை அனைத்து அதிகாரங்களையும் பெற்ற ‘பிரிட்டிஷ் பாணியிலான’ பிரதமராக மாற்றுகிறது. “ஒரு ஆங்கில (பிரிட்டிஷ்) பிரதமர், பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையுடன் பாதுகாப்பாக இருந்தால், ஜெர்மன் பேரரசரும், அமெரிக்க ஜனாதிபதியும், அமெரிக்க கூட்டமைப்பில் உள்ள அனைத்து மாகாணங்களின் தலைவர்களும் செய்ய முடியாததைச் செய்ய முடியும்;

அவர் (பிரிட்டிஷ் பிரதமர்) சட்டங்களை மாற்றலாம், வரி விதிக்கலாம் அல்லது அதை ரத்து செய்யலாம், மேலும் அரசின் அனைத்து சக்திகளையும் வழிநடத்தலாம்,” என்று சர் சிட்னி லோ கூறியுள்ளார்.

அந்த ஏற்பாடு பிரிட்டனுக்கு நன்மை செய்திருந்தாலும் (ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் அயர்லாந்தை சேர்ந்தவர்கள் இக்கருத்தில் இருந்து மாறுபடலாம்) இந்தியாவின் நிலை வேறு. அது இந்திய ஒன்றியத்தில் கூட்டாட்சி கொள்கையின் கடுமையான சிதைவுகளுக்கு வழிவகுக்கிறது.

மோடி ஒரு அமெரிக்க வகை அமைப்பின் கீழ் ஜனாதிபதியாக இருந்திருந்தால், மேலே குறிப்பிடப்பட்ட எந்த நடவடிக்கைகளையும் அவரால் எடுக்க முடியாது. அவரது நிர்வாக உத்தரவுகளை நீதிமன்றங்கள் ரத்து செய்யக்கூடும்; சொந்தமாக வெளிப்படையான விவாதங்கள் இல்லாமல் சட்டங்களை இயற்ற முடியாது; சட்டமன்றத்தின் எந்த விதிகளையும் மாற்ற முடியாது மற்றும் நாட்டின் ரூபாய் தாள்களை மாற்றுவதற்கான ரகசிய முடிவை அவரால் எடுக்க முடியாது.

எல்லாவற்றிக்கும் மேலாக, மோடி ஒரு (அமெரிக்க வகை) ஜனாதிபதியாக அரசாங்கத்தை நடத்தியிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போது அவருடைய அதிகாரம் குறைந்து இருக்கும். ஆனால், இந்தியா அதன் மையப்படுத்தப்பட்ட அமைப்பினால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. நாம் அதை மாற்றாததற்கான ஒரே காரணம், நமக்குப் புரியாத ஒரு அமைப்பின் மீது நமக்கு ஏற்படும் நியாயமற்ற வேறுபாடுதான்.

(www.thewire.in இணையதளத்தில் பானு தமீஜா எழுதிய கட்டுரையின் சுருக்கமான மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்