Aran Sei

காற்றாலையில் தண்ணீர் உற்பத்தி செய்ய முயுமா? – மோடியைச் சீண்டிய ராகுல்

மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியின் மூலம் தண்ணீர் உற்பத்தி செய்ய முடியும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க் கிழமையன்று டென்மார்கைச் சேர்ந்த, காற்றாலை தயாரிக்கும் வெஸ்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹென்ரிக் ஆண்டர்சனுடன் நரேந்திர மோடி காணொலியில் உரையாடினார்.

அந்த உரையாடலின்போது, காற்றாலைகள், காற்றினில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீரை உருவாக்க முடியும் என்பதை விளக்கியுள்ள மோடி, அந்தத் தொழில்நுட்பத்தை வெஸ்டா நிறுவனம் உருவாக்க வேண்டும் என்று ஹென்ரிக்கிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம், கடற்கரை கிராமங்களில் சுத்தமான குடிநீர் வழங்க முடியும் என்று கூறியுள்ள மோடி, காற்றில் இருக்கும் ஆக்சிஜனையும் காற்றாலைகளால் தனியாகப் பிரிக்க முடியும் என்று கூறியுள்ளார். ஆகவே, காற்றாலைகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதுடன், சுத்தமான தண்ணீர் மற்றும் ஆக்சிஜனையும் உற்பத்தி செய்ய முடியும் என்றும் மோடி கூறியுள்ளார்.

மோடி பேசியுள்ள வீடியோயை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “நமது பிரதமருக்குப் புரியவில்லை என்பதைவிட, அதை அவரிடம் தைரியமாகச் சுட்டிக்காட்ட யாரும் இல்லை என்பதுதான் இந்தியாவிற்கு உண்மையான ஆபத்து” என்று பதிவிட்டுள்ளார்.

காற்றில் இருக்கும் ஈரப்பதம் காற்றாலையின் விசிறிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்ததாக தி இந்து கூறுகின்றது.

காற்றாலையில் பொருத்தப்பட்டுள்ள டர்பைன்கள், காற்று சக்தியை மின்சக்தியாக மாற்றுகின்றன. அதில் உள்ள விசிறிகள் ஈரப்பதத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையிலேயே வடிமைக்கப்படுகின்றன.

“காற்றில் உள்ள நீர்த்திவலைகள் டைர்பைனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை” என்று பனாஜி டிஜி லைஃப் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் அமித் ராம்பியா கூறியுள்ளதை தி இந்து சுட்டிக்காட்டியுள்ளது.

“உதாரணத்திற்கு, கடற்கரையோர கிராமங்களில் பொருத்தப்படும் காற்றாலைகளின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி, நிலத்தடி நீரை இரைக்கவும், தண்ணீரைச் சுத்தப்படுத்தவும் முடியும்” என்று அமித் ராம்பியா கூறியுள்ளார்.

பிரதமரை கேலி செய்யும் வகையில், ராகுல் காந்தி வெளியிட்டுள் பதிவிற்குப் பதில் அளிக்கும் வகையில், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும், பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியாவும் மோடி கூறிய கருத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சில செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.

அதில் 2012- ம் ஆண்டு சிஎன்என்-ல் வெளியான ஒரு கட்டுரையில், பிரான்சைச் சேர்ந்த ‘இயோல் வாட்டர்ஸ்’ என்ற காற்றாலை தயாரிக்கும் நிறுவனம், காற்றிலிருந்து தண்ணீரை தயாரிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனமே தற்போது செயல்பாட்டில் இல்லை.

சென்னையில் உள்ள டர்பைன் உற்பத்தி நிறுவனத்தை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நிபுணர், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளது நடைமுறையில் சாத்தியமற்று என்று தெரிவித்துள்ளதாக ‘தி இந்து’ கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்