Aran Sei

“மோடி எதிர்காலத்தில் வழிபடப்படுவார் ” – மோடியை ராமனுடன் ஒப்பிட்டு துதிபாடிய மாநில முதல்வர்

image credit : ndtv.com

திர்காலத்தில் பிரதமர் மோடி வழிபடப்படுவார் என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத்சிங் ராவத் பேசியுள்ளார்.

நேற்று, ரிஷிகுல் அரசு பிஜி ஆயுர்வேத கல்லூரியில், ஒரு சமூக அமைப்பு ஏற்பாடு செய்த “நேத்ர கும்பம்” என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மோடியை இந்து கடவுள் ராமருடன் ஒப்பிட்டுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

“இன்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள், நமது பிரதமருடன் படம் எடுத்துக் கொள்ள வரிசையில் நிற்கிறார்கள். முன்பெல்லாம் இந்திய தலைவர்களை உலகத் தலைவர்கள் யாரும் கண்டு கொண்டதில்லை. நரேந்திர மோடி வந்ததும் புதிய இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி, உலக அரங்கில் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்தார் என்பதும், நரேந்திர மோடிக்கு முன்பு பிரதமராக இருந்த பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் உலகத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு ஆண்டுகளாக, உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத், பாஜக மேலிட தலைமையால் நீக்கப்பட்டு, தீரத்சிங் ராவத் சென்ற வாரம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். கட்சித் தலைமைக்கு விசுவாசமானவர்களை நியமித்து டெல்லியில் இருந்து மாநிலங்களை ஆளும் முறைக்கு ஒரு வரம்பு உள்ளது என்று தி ஹிந்து தலையங்கம் எழுதியிருந்தது.

உத்தர்காண்டில் புதிய முதல்வர் பதவியேற்பு – ” டெல்லியில் இருந்து மாநிலங்களை கட்டுப்படுத்துவதன் வரம்பைக் காட்டுகிறது “

தீரத்சிங் ராவத் பதவியேற்ற பிறகு, 4 நாட்களில், மாநிலத்தில் உள்ள இந்து புனிதத் தலமான ஹரித்வாருக்கு இரண்டு முறை சென்று விட்டார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.

“பழைய காலத்தில் கடவுள் ராமர் சமூகத்துக்கு நல்லது செய்ததால், மக்கள் அவரை கடவுளாக கருத ஆரம்பித்தனர். அதே போல, எதிர்காலத்தில் நமது அன்புக்குரிய பிரதமருக்கும் அது நடக்கும்” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2015-ம் ஆண்டு குஜராத்தின் ராஜ்கோட்டில் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் ஒரு கோயிலை கட்டியுள்ளனர் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டிருந்தது. இந்தக் கோயிலை கட்ட ரூ 7 லட்சம் நிதி திரட்டப்பட்டிருந்தது, மோடியின் சிலைக்கு மட்டும் ரூ 2 லட்சம் செலவானது என்று என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆருக்கு, சென்னையை அடுத்த திருவள்ளூரில், கலைவாணன் என்பவர் கோயில் கட்டி, அங்கு வழிபாடு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தலைவர்களை கடவுளாக சித்தரித்து மக்களின் மத உணர்வை பயன்படுத்திக் கொள்வது, பாஜகவின் தனிநபர் வழிபாட்டால் இப்போது இந்திய அளவில் பரவியுள்ளது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்