Aran Sei

’ஜூன் 19 இந்திய வரலாற்றின் கருப்பு நாள்’- காங்கிரஸ்

credit: hindustantimes

 

“எல்லையில் சீனா அத்துமீறி இந்தியாவுக்குள் நுழையவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பொய் கூறிய ஜூன் 19-ம் தேதி இந்திய வரலாற்றில் கருப்பு நாள்” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய-சீன எல்லை தகராறின் விளைவாக சென்ற ஜூன் 15-ம் தேதி இந்திய படைவீரர்கள் இருபது பேர் வீரமரணம் அடைந்தனர். அந்த சம்பவத்துக்கு பிறகு ஜூன் 19-ம் தேதி நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில் மோடி, இந்திய நிலப்பகுதியில் யாரும் அத்துமீறி நுழையவில்லை என்று குறிப்பிட்டார்.

நேற்று மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆற்றிய உரையில், இந்தியாவுக்கு சொந்தமான 38,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளாதாகவும் எல்லையில் பிரச்சனை இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை என்றும் கூறினார்.

credit: amarujala.com
credit: amarujala.com

இதற்கு எதிர்வினையாக, மோடி நாட்டு மக்களிடம் பொய் கூறியிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. “மோடி அரசு 5,521 கோடி ரூபாயை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து பிரதம மந்திரி ஏழைகள் நலத்திட்டத்துக்கு கடன் பெற்றுள்ளது” என்று காங்கிரஸ் சாடியுள்ளது. இந்த வங்கியின் தலைமையிடம் பெய்ஜிங்கில் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெய்ரா, “இந்திய-சீன எல்லை பிரச்சனை பற்றி ஒரு மத்திய அமைச்சர் மற்றொரு அமைச்சர் பேசியதற்கு நேர்மாறாக பேசுகின்றார்” என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 19-ம் தேதி ஆற்றிய உரை இந்திய வரலாற்றில் கருப்பு நாள் மட்டும் கிடையாது. அவர் அன்று நாட்டு மக்களிடம் பொய் கூறியுள்ளார். அந்த உரையில் சீனா எல்லையில் அத்துமீறவில்லை என்று நற்சான்றிதழ் வழங்கியதுடன் ஆசிய முதலீட்டு வங்கியின் கடன் ஒப்பந்ததில் கையெழுத்தும் இடப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

நேற்று மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர், சீனா இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்திருப்பதாக ஒப்புக்கொண்டது, “மோடி அரசாங்கத்தின் போலித்தனத்தையும் ஏமாற்றுவித்தையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது” என்று கெய்ரா தெரிவித்தார்.

இந்திய-சீன எல்லை பிரச்சனை பற்றி மோடி அரசாங்கத்தின் வெளிப்படையான இரட்டை பேச்சை கேட்டு நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

credit: globalresearch.ca
credit: globalresearch.ca

நாடாளுமன்றத்தில் எல்லை பிரச்சனை தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணைய அமைச்சர் நித்தியானந்த் ராய் அளித்த பதிலில், கடந்த ஆறு மாதங்களில் சீனா இந்திய எல்லையில் அத்துமீறி நுழையவில்லை என்று கூறி “இரண்டாவது பேரதிர்ச்சியை” கொடுத்தார் என்று கெய்ரா தெரிவித்தார்.

”ஜூன் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த நமது படைவீரர்களை இது அவமானப்படுத்துவதாகும். கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சீன நிலப்பரப்பில் நடந்தாக அரசாங்கம் கூற வருகிறதா? ஆம் எனில், எதிராளியின் நிலப்பரப்புக்குள் அத்துமீறி இந்திய ராணுவம் நுழைந்ததுள்ளது என்று அரசாங்கம் குற்றம் சுமத்துகிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்