பிரதமரின் உருவ பொம்மை எரிக்கப்படுவது ஒரு “ஆபத்தான முன்மாதிரி” என்றும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பஞ்சாப் விவசாயிகளின் கோபத்துக்கு “ஒத்தடம் கொடுங்கள்” என்றும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதம், நாடாளுமன்றத்தில், மூன்று புதிய வேளாண் சட்டங்களை இயற்றியதில் இருந்து, பஞ்சாபில் விவசாயிகள் அச்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை பின்வாங்குவதற்கு அழுத்தம் கொடுத்தும் போராடி வருகின்றனர்.
இம்மாதத் தொடக்கத்தில், புதிய சட்டங்களை எதிர்த்து ராகுல் காந்தியும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ஒரு டிராக்டர் பேரணிக்குத் தலைமை தாங்கினார். கடந்த வாரம், பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை “ரத்து செய்வதற்கான” சட்டத்தை நிறைவேற்றியது.
இச்சட்டங்களுக்கு எதிராக வாதிட்ட காங்கிரஸ், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நிலையைப் பலவீனப்படுத்தும் என்றும் அவர்களின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) உத்தரவாதம் அளிக்காது என்றும் கூறியது.
அதிக உற்பத்தி ஆண்டுகளில் விவசாய விளை பொருட்களின் விலை திடீரென மிகவும் வீழ்ச்சி அடையாமல் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யும். இதுவே குறைந்த பட்ச ஆதரவு விலை (MSP-Minimum Support Price} எனப்படும். புதிய வேளாண் சட்டங்கள் இதனைத் தாக்கும் என்று எதிர்க்கட்சிகளும் விவசாயிகளும் வாதிட்டனர்.
எவ்வாறாயினும் காங்கிரஸ், விவசாயிகளைத் தவறாக வழிநடத்தியதாகப் பாஜக குற்றம் சாட்டியதுடன், அவர்கள் தொடர்ந்து குறைந்த பட்ச ஆதரவு விலையைப் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளது. புதிய சட்டங்கள் வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்களின் கீழ் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் நாட்டில் எங்கும் தங்கள் விளைபொருட்களை விற்க அனுமதிக்கின்றன என்றும் பாஜக கூறுகிறது.
நேற்று, தசரா பண்டிகையின் போது, பஞ்சாபின் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்ட பாரதிய கிசான் யூனியனைச் (இந்திய விவசாயிகள் சங்கம்) சேர்ந்த பலரும் பிரதமர் நரேந்திர மோடி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வ தேசிய நிறுவனங்களின் உருவ பொம்மைகளை எரித்து, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் உருவ பொம்மைகளுடன் மோடியின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்ட செய்திக்கு வினையாற்றிய ராகுல் காந்தி பிரதமர் உடனடியாக விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்றார்.
This happened all over Punjab yesterday. It’s sad that Punjab is feeling such anger towards PM.
This is a very dangerous precedent and is bad for our country.
PM should reach out, listen and give a healing touch quickly. pic.twitter.com/XvH6f7Vtht
— Rahul Gandhi (@RahulGandhi) October 26, 2020
“இது நேற்று பஞ்சாப் முழுவதும் நடந்தது. பிரதமர் மீது பஞ்சாப் அத்தகைய கோபத்தைக் கொண்டிருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. இது மிகவும் ஆபத்தான முன்மாதிரி. இது நம் நாட்டுக்கும் ஆபத்தானது. பிரதமர் உடனடியாக விவசாயிகளைச் சந்திக்க வேண்டும், அவர்களது கோரிக்கைகளுக்குச் செவி கொடுக்க வேண்டும், விரைவில் அவர்களின் கோபம் தணிய ஒத்தடம் கொடுக்க வேண்டும்,” என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.