Aran Sei

“இந்தியாவின் முதுகுத்தண்டை அழித்துவிட்டார் மோடி”: ராகுல் காந்தி சாடல்

Credits: Indian Express

வேளாண் சட்டங்களை எதிர்த்து ராகுல் காந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மூன்றாம் நாளான இன்று ஹரியானா செல்ல இருக்கிறார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளைக் காப்போம் என்ற டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு வருகிறார்.

பஞ்சாப் பட்டியாலாவில் ஒருங்கினைக்கப்பட்டுள்ள நிகழ்வில் பத்திரிகையாளருக்கு அளித்துள்ள பேட்டியில் ராகுல் காந்தி,

”மத்திய அரசு கூறுவது போல, விவசாயிகள் இந்தச் சட்டங்களால் பலனடைகிறார்கள் என்றால், நாடாளுமன்றத்தில் ஏன் இதுகுறித்து ஆலோசனை நடத்தவில்லை?

இந்த மூன்று சட்டங்களால் விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. இதன் மூலம் வரவிருக்கும் மாற்றங்களால் நுகர்வோரும் சேர்ந்தே பாதிப்புக்குள்ளாவார்கள்.

மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் தற்போது இருந்துவரும் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பினை அழிப்பதற்கான வழிதான். இது பஞ்சாப் மாநிலத்தை வெகுவாகப் பாதிக்கும். நம் விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல் இது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சி விவசாயம் மற்றும் அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தது என்றும் ஒவ்வொரு 4 கிலோமீட்டருக்கும் ஒரு விற்பனைச் சந்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார்.

சமீபத்தில் அவர் ஹத்ராஸ் சென்றுவந்தது குறித்த கேள்விக்கு, “பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தனித்து விடப்படவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினேன். அவர்களுக்காக நங்கள் துணையாக இருக்கிறோம்.

அந்த மொத்தக் குடும்பத்தையும் உத்தரப்பிரதேச நிர்வாகம் குறிவைத்துத் தாக்கியது. ஆனால், நம் பிரதமர் இந்தப் பிரச்சனை குறித்து ஒரு வார்த்தை கூட இதுவரை சொல்லவில்லை.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசின் நடவடிக்கை பற்றி, ”இந்தியப் பொருளாதாரத்தின் முதுகுத்தண்டாகச் செயல்படும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களைப் பொதுமுடக்கத்தின் போது மோடி அரசாங்கம் மொத்தமாக அழித்தொழித்து இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதமே நான் கொரோனா நோய்த்தொற்று குறித்து எச்சரித்திருந்தேன். ஆனால் நான் விளையாட்டுத்தனமாகப் பேசுவதாக அவர்கள் கூறினார்கள்.” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அமைச்சரவையில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்படுகையில் வெளிநாட்டில் ராகுல் என்ன செய்துகொண்டிருந்தார் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியினரின் விமர்சனம் குறித்து கேட்டபோது,

“மருத்துவப் பரிசோதனைக்காக என்னுடைய அம்மா வெளிநாடு சென்றிருந்தார். குழுவினருக்குக் கொரோனா தொற்று இருந்ததால் என சகோதரியால் உடன் செல்ல முடியவில்லை. நான் அம்மாவுக்குத் துணையாக இருந்தேன். என்ன இருந்தாலும் நான் அவருடைய மகன், அவரைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.” எனப் பதிலளித்துள்ளார்.

ராகுல் காந்தியின் விவசாயிகளைக் காப்போம் பயணம் இன்று ஹரியானாவைச் சென்றடைய உள்ளதால், பஞ்சாப் – ஹரியானா எல்லையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் அவரை வரவேற்கக் காத்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்