Aran Sei

பெண்களின் வீட்டு வேலைக்கு சம்பளமா? – நடிகை கங்கனா ராணாவத் கடும் எதிர்ப்பு

credits : the indian express

க்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான  பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த பிரச்சாரத்தின் போது மகளிர் சுய உதவிக்களைச் சந்தித்த அவர், ”இல்லத்தரசிகளுக்கு ஊதியம்” எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

மக்கள் நீதி மய்யத்தின் ஏழு அம்ச கோரிக்கைகளில் இதுவும் இடம் பெற்றுள்ளது.

பெண்கள் குறித்து பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், “உலக நாடுகளில் அரசியலில் பெண்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமையைப் போன்று மக்கள் நீதி மய்யத்தில் உரிய உரிமையும், பதவிகளும் வழங்கப்படும். தங்கையாக, அம்மாவாக, தோழியாக, மனைவியாகச் சாதித்து வரும் பெண்கள் அரசியலிலும் சாதிப்பார்கள் என்பது மக்கள் நீதி மய்யத்தின் கருத்து.

வீட்டில் உள்ள பெண்களுக்கு இல்லத்தரசி என்ற பட்டத்தைக் கொடுத்துவிட்டு, வெளியில் வேறு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை. மக்கள் நீதி மய்யத்தில் பெண்களுக்குச் சமபங்கு உண்டு. அவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற கருத்து மேலைநாடுகளில் பேசப்பட்டு வருகிறது. அதை மக்கள் நீதி மய்யம் செயல்படுத்தும்” என கூறியிருந்தார்.

’பொறியியல் கல்வியை காவிமயமாக்குவது முன்னேற்றமல்ல’- கமல்ஹாசனுக்கு பதிலடி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் திட்டத்தை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் “வீட்டு வேலைகளை சம்பள தொழிலாக அங்கீகரித்து இல்லத்தரசிகளுக்கு மாதந்திர ஊதியத்தை மாநில அரசு செலுத்தும் என்ற கமல்ஹாசனின் யோசனையை நான் வரவேற்கிறேன். இது சமுதாயத்தில் இல்லத்தரசிகளின் சேவைகளை அங்கீகரித்து பணமாக்கும், அவர்களின் சக்தியையும் சுயேச்சையையும் மேம்படுத்தும். பொது அடிப்படை வருமானத்துக்கு நிகரானதை உருவாக்கும்” என்று பதிவு செய்துள்ளார்.

இதைக் கடுமையாக விமர்சித்துள்ள இந்துத்துவவாதியும், பாஜக ஆதரவாளருமான நடிகை கங்கனா ரனாவத் தன் ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் இணையரோடு நாங்கள் ஈடுபடும் உடலுறவுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டாம், எங்கள் சொந்த குழந்தைகளை வளர்ப்பதற்கு எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம், எங்கள் சொந்த சிறிய ராஜ்யத்தின் ராணிகளாக இருப்பதற்கு எங்களுக்கு சம்பளம் தேவையில்லை, எல்லாவற்றையும் வணிகமாக பார்ப்பதை நிறுத்துங்கள். உங்கள் பெண்ணிடம் உங்களை முழுமையாக சரணடையுங்கள். அவளுக்கு நீங்கள் முழுவதுமாக தேவை. உங்கள் அன்பு / மரியாதை / சம்பளம் மட்டுமல்ல” என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பது முற்போக்கான திட்டம் என வரவேற்கப்பட்டாலும், “பெண்களின் தைரியம் ஆபத்தை விளைவிக்கும்” எனும் ரீதியிலான கமல்ஹாசனின் சமீபத்திய ட்விட்டர் பதிவு மிகவும் பிற்போக்கானது என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்