மக்களவையில் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்திரபிரதேச விவசாயிகள் மத்திய அரசின் விவசாயம் தொடர்பான மசோதாக்களை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் செப்டம்பர் 16-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தொடரின் நான்காம் நாளான நேற்று, மக்களவையில் வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் மற்றும் விவசாய ஒப்பந்த அவசர சட்டம் ஆகிய இரண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்திருந்த வேளாண்மை தொடர்பான மூன்று மசோதாக்களை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் செப்டம்பர் 15-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிரோமணி அகாலிதளம் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சி நடத்தும் பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம், பா.ஜ.க கூட்டணி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
விவசாயிகள் தொடர்பான இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகியுள்ளார்.
இது குறித்து அவர், “விவசாயிகளுக்கு எதிரான அவசர சட்டங்களை எதிர்த்து அமைச்சரவையில் இருந்து நான் பதவி விலகியிருக்கிறேன். விவசாயிகளின் மகளாக, சகோதரியாக அவர்களோடு துணை நிற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.“ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
I have resigned from Union Cabinet in protest against anti-farmer ordinances and legislation. Proud to stand with farmers as their daughter & sister.
— Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) September 17, 2020
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் “ஆயிரக்கணக்கான விவாசாயிகள் சாலைகளில் இறங்கி போராடி வருகிறார்கள். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்காமல் சட்டம் நிறைவேற்றும் இந்த அரசின் பகுதியாக நான் இருக்க விரும்பவில்லை என்பதால் பதவி விலகினேன்.” எனவும் கூறியுள்ளார்.
Thousands of farmers are on the streets. I did not want to be part of the government that got the bills passed in the House without addressing the apprehensions of farmers, that is why I resigned: Shiromani Akali Dal leader Harsimrat Kaur Badal #AgricultureBill pic.twitter.com/4aBoRdSi5G
— ANI (@ANI) September 17, 2020
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், “விவசாயிகளோடு நாங்கள் துணை நிற்கிறோம், அவர்களுக்காக எதுவும் செய்வோம்.” என்று கூறினார்.
பிரதமரின் பரிந்துரையை ஏற்று ஹர்சிம்ரத் கவுர் பாதலின் பதவி விலகலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். ஹர்ம் சிம்ராத் கவுர் வகித்து வந்த உணவு பதப்படுத்துதல் துறை பொறுப்பு, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
Harsimrat Kaur’s decision to quit Union Cabinet is another in the long chain of theatrics being enacted by @Akali_Dal_ which has still not quit ruling coalition. It's motivated not by any concern for farmers but to save their own dwindling political fortunes. Too little too late.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 17, 2020
ஹர்சிம்ரத் கவுரின் பதவி விலகல் குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் ”இது திட்டமிட்டு நிகழ்த்தப்படும் நாடகம் மட்டுமே. அகாலிதளம் கட்சியின் அரசியல் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியே அன்றி பஞ்சாப் விவசாயிகளின் நலனைக் குறித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.