Aran Sei

இறப்பு எண்ணிக்கை இல்லை, இழப்பீடும் இல்லை: மத்திய அரசு

Migrant Workers

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அமர்வில் புலம்பெயர் தொழிலாளர்கள் இறப்பு எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “இறந்தவர்கள் குறித்த தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை” என மத்திய அரசு பதிலளித்துள்ளது.

18 நாள் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, மக்களவை உறுப்பினர்கள் பலரும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்கள். அக்கேள்விகளுக்கு, ஊரடங்கின் போது நாடெங்கும் 1 கோடி தொழிலாளர்கள் புலம்பெயர்ந்துள்ளார்கள் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

32.49 லட்சம் தொழிலாளர்கள் உத்தரபிரதேசத்துக்கும், 15 லட்சம் தொழிலாளர்கள் பீஹாருக்கும் புலம்பெயர்ந்துள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லீக் லீகின் தமிழக எம்.பி கே.நவாஸ்கனி உட்பட மூன்று உறுப்பினர்கள் ஊரடங்கினால் சொந்த ஊர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறப்பு எண்ணிக்கை குறித்து கேள்விகள் எழுப்பினார்கள்.

”உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் மாநிலவாரியான விவரங்கள்?” என்ற கேள்விக்கு “இதுபோன்ற தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை.” என மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளார்.

”உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? இருப்பின் இழப்பீட்டு தொகை விவரங்கள்?” என்ற கேள்விக்கு, ”இறந்தவர்கள் குறித்த தரவு இல்லாததால், இழப்பீடு குறித்து சொல்வதற்கில்லை” எனவும் பதிலளித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் லாக்-டவுனில் எத்தனை புலம்பெயர் தொழிலாளர் இறந்தார்கள், எத்தனை வேலைகள் பறிபோயின என்று மோடி அரசுக்குத் தெரியவில்லை. நீங்க கணக்கு எடுக்கா விட்டால் மரணங்கள் நடக்கவில்லையா, என்ன?” என்று பதிவிட்டுள்ளார்.

“ஆமா, சோகம் என்னவென்றால் அரசுக்கு உறைக்கவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் மரணத்தை உலகமே பார்த்தது. மோடி அரசுக்கு மட்டும்தான் செய்தி கிடைக்கவில்லை” எனவும் ட்விட்டரில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்