சமீபத்தில், பீகாரின் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற மேவலால் சவுத்ரி திடீரெனத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. ஆட்சியமைக்கும் அளவிற்குப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியதால் கடந்த திங்கட்கிழமை நிதிஷ் குமார் முதல்வராகப் பதவி ஏற்றார். அவருடன் மேவலால் சவுத்திரியும் அமைச்சராகப் பதவி ஏற்றார்.
மேவலால் பதவியேற்றதில் இருந்தே, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
மேவலால் தேசிய கீதத்தைத் தவறாகப் பாடிய காணொளியும் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தற்போது, மேவலால் சவுத்ரி திடீரெனத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2017-ம் ஆண்டில், பீகார் வேளாண் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதற்காக மேவலால் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டார். “ஐக்கிய ஜனதா தளத்தின் ஊழல் நிறைந்த சட்டமன்ற உறுப்பினர் மேவாலலுக்கு நிதீஷ் குமார் அமைச்சரவைப் பதவியை வழங்கியுள்ளார். இது கிட்டத்தட்ட 60 மோசடிகளை ஊக்குவித்த நிதீஷ் குமாரின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகின்றது. இந்த மனிதன் ஒரு பதவிக்காக மிகவும் தாழ்வாகச் செல்வார்” என்று ராஷ்டிரிய ஜனதா தளம் செவ்வாயன்று பதிவிட்டுள்ளது.
தனக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள மேவலால் சவுத்ரி, “குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலோ அல்லது நீதிமன்றம் தீர்ப்பு வாங்கினாலோ தான் ஒரு குற்றத்தை உறுதி செய்ய முடியும். எனக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்க அவர்களுக்கு இந்த இரண்டில் ஒன்று கூட இல்லை” என்று கூறியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.