Aran Sei

மெஹ்பூபா முப்தி : `ஆகஸ்ட் 5 – கறுப்பு நாளில் கறுப்பு முடிவு’

Image Credits: The Print

க்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும், ஜம்மு-காஷ்மீர்-ன் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முப்தி விடுதலை செய்யப்பட்டதற்குத் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும், அவர் டெல்லிக்குக் கண்டனச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் என்று ‘இந்துஸ்தான் டைம்ஸில்’ செய்தி வெளியாகி உள்ளது.

விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஒரு ஒலிச் செய்தியில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண மக்கள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும் என்றும், 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று டெல்லியால் பறிக்கப்பட்டவை அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார் என ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

1.23 நிமிட ஒலிச்செய்தியில் பேசிய மெஹ்பூபா “ஓர் ஆண்டுக்கு மேலாக உள்ளிருந்த நான் இன்று விடுதலை அடைந்துள்ளேன். இந்த நேரத்தில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அந்தக் கறுப்பு நாள் அன்று எடுக்கப்பட்ட கறுப்பு முடிவால் எப்போதும் என் இதயமும் ஆன்மாவும் வலிக்கும் என்பதைக் கூறிக்கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் இதே உணர்வு இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். அன்று நடந்த கொள்ளை மற்றும் அவமானத்தை நம்மில் யாரும் மறக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

“டெல்லி நீதிமன்றம் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு ஜனநாயக விரோதமாக நம்மிடமிருந்து பறித்த அனைத்தையும் திரும்பப்பெறுவதற்கு இப்போது நாம் மீண்டும் வலியுறுத்த வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மெஹ்பூபா 14 மாதங்களுக்கு மேலாகச் சிறையில் இருந்தார். நேற்று மாலை அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு மாற்றங்கள், ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தபின்னர், அப்பிராந்தியத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் இறுதியாக 61 வயதான மெஹ்பூபா விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று அவரது கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக என்று ‘இந்துஸ்தான் டைம்ஸில்’ செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் தீர்மானத்திற்கான போராட்டம் தொடரும் என்றும் மெஹ்பூபா கூறியுள்ளார்.

“ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரைக் கொடுத்த காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். இந்தப் பாதை எளிதானது அல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நமது தீர்மானம் இதில் நமக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

தன்னைப் போல சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். “இப்போது நான் விடுவிக்கப்பட்டுள்ளேன், இதே போல் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மக்களை விடுவிக்க வேண்டும் என்றும் நான் கோருகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘கொடுங்கோன்மையின் அத்தியாயம் முடிந்துவிட்டது’

மெஹ்பூபா தனது ட்விட்டர் பக்கத்தை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதால், அவருக்குத் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இன்று காலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக வழிமுறையை ஜம்மு-காஷ்மீர்-ல் மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.

“14 மாதங்களுக்குப் பிறகு மெஹ்பூபா முப்தி காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். மற்ற அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இடைநிறுத்தப்பட்ட ஜனநாயகச் செயல்முறைகளையும் மீண்டும் நிலைநாட்ட வேண்டும்,” என்று அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“கொடுங்கோன்மையின் இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. காஷ்மீர்-ன் பிரதான தலைவர்களை அச்சுறுத்துவதே குறிக்கோளாக இருந்தது. ஆனால், சர்வாதிகாரத்தின் வரம்புகள் சோதிக்கும் ஆய்வகமாக காஷ்மீர் மாறியுள்ளதை, இந்தியா உணர்கிறது. இருப்பினும், மெஹ்பூபா முப்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வாழ்த்துகள்!” என்று காங்கிரஸ் தலைவர் சல்மான் அனீஸ் சோஸ் தெரிவித்துள்ளார்.

“கடவுளுக்கு நன்றி. இறுதியாக மெஹ்பூபா முப்தி 15 மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். ஃபாரூக் சாஹிப் மற்றும் ஒமர் அப்துல்லாவைப் போன்ற இந்தக் கைதும் நம் நாட்டில் தனித்துவமானது. இதில் கைது செய்ய உத்தரவிட்ட அரசுக்கே இந்த 3 தலைவர்களும் என்ன குற்றம் செய்தார்கள் என்பது தெரியவில்லை. ஜனநாயகத்துக்கு ஜெய் ஹோ!” என்று ஜம்மு-காஷ்மீர்-ன் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ்-ன் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் ட்வீட் செய்துள்ளார்.

நேற்று, தேசிய மாநாட்டின் துணைத் தலைவரும் ஜம்மு-காஷ்மீர்-ன் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா மெஹ்பூபாவின் விடுதலையை வரவேற்றார். “ஒரு ஆண்டுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் மெஹ்பூபா முப்தி விடுவிக்கப்பட்டார் என்பதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரைத் தொடர்ந்து சிறையில் வைத்திருந்தது ஒரு மோசடி மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. மெஹ்பூபாவை வரவேற்கிறோம்,” என்று உமர் அப்துல்லா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்