Aran Sei

“விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு நல்லபடியாக முடியாது” – மேகாலயா கவர்னர் எச்சரிக்கை

image credit : Wikipedia

மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

தனது சொந்த நகரான பாக்பட்டின் அமிநகர் சராய் நகரில் அவருக்கு நடந்த ஒரு பாராட்டுக் கூட்டத்தில் பேசிய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், “டெல்லிக்கு அருகில் உள்ள போராட்டக் களங்களில் இருந்து வெளியேறும்படி விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது” என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ நீர்த்துப் போக வைத்து ஒன்றிய பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு, ஜம்மு & காஷ்மீர் மாநிலமாக இருந்த போது அம்மாநிலத்தின் ஆளுநராக சத்யபால் மாலிக் பணியாற்றியுள்ளார். சத்யபால் மாலிக் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி. அவர் மத்திய பாஜக அரசால் கோவா, பீகார், ஒடிசா, ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும், இப்போது மேகாலயாவிலும் ஆளுநராக பணிபுரிய நியமிக்கப்பட்டவர்.

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்வரை தேசியக்கொடியை ஏந்த மாட்டேன் – மெஹ்பூபா முஃப்தி

“சென்ற வாரம் நான் சந்தித்த பிரதமருக்கு நெருக்கமான ஒரு மூத்த பத்திரிகையாளரிடம் பேசும் போது, ‘விவசாயிகளை இழிவுபடுத்தி, அவர்களை டெல்லியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவது தவறான முயற்சி’ என்று பிரதமர் மோடியிடம் சொல்வதற்கு நான் முயற்சி செய்தேன், இப்போது நீங்கள் மோடியிடம் பேசி இதை ஏற்க வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“முதலாவதாக, விவசாயிகள் போராட்டக் களத்தை விட்டு வெளியேற மறுப்பார்கள். ஒருவேளை அவர்கள் வெளியேறி விட்டால், அடுத்த 300 ஆண்டுகளுக்கு அதை மறக்க மாட்டார்கள்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை கைவிடாவிட்டால் எத்தனை ஆண்டுகளானாலும் போராட்டம் தொடரும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

“குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து விடுங்கள். மற்றதை கையாள்வது என்னுடைய பொறுப்பு” என்று அவர் உறுதியளித்துள்ளார்.

சீக்கிய விவசாயிகள் கலந்து கொள்ளும் விவசாயப் போராட்டம் மத்திய அரசுக்கு நல்லபடியாக முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்