Aran Sei

கலவரத்தை தூண்டியதாக பத்திரிகையாளர் மீது வழக்கு – தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுப்பு

credits : bar and bench

ழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத சமூகங்களுக்கிடையே கலவரத்தை தூண்டியதாக மூத்த பத்திரிகையாளர் பேட்ரிசியா முகிம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, மேகாலயா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய மறுத்துள்ளது.

மேகாலயாவில், கடந்த ஜீலை மாதம் கூடைபந்து விளையாடிக் கொண்டிருந்த சில பழங்குடி அல்லாத இளைஞர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத 20 நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். இதை செய்தது பழங்குடி இளைஞர்கள் தான் என வெளிப்படையாக பேட்ரிசியா முகிம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த பத்திரிகையாளரும் ஷில்லாங் டைம்சின் ஆசிரியருமான பேட்ரிசியா முகிம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் “ பழங்குடியினர் அல்லாத மக்கள் மீது  நடக்கும் தொடர் வன்முறைகள், ஒரு அரசாக மேகாலயா தோல்வியுற்றதை வெளிப்படுத்துகிறது” என பதிவிட்டுள்ளார்.

”இது போன்ற வன்முறையாளர்களும், தொல்லைத் தருபவர்களும் 1979 ஆம் ஆண்டிலிருந்தே கைது செய்யப்படவில்லை எனவும் கிராம கவுன்சில் இது போன்ற நடவடிக்கைகளை தடுக்காமல் இருப்பது ஏன்?” எனவும் தன்னுடைய பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.

பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத சமூகங்களுக்கிடையே பதற்றத்தை தூண்டியதாகவும், அவதூறு பரப்பியதாகவும் முகிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம கவுன்சில் உறுப்பினர்கள் மேகாலயா காவல்துறையிடம்  புகாரளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 ஏ (சாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடுதல்), 503 (அவதூறு பரப்புவது), 505 (இரு சமூகங்களுக்கிடையே கலவரத்தை தூண்டுவது) ஆகிய பிரிவுகளில் மேகாலாயா காவல்துறையால்முகிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி முகிம் மேகாலயா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

உல்ஃபாவின் முக்கிய தளபதி சரண் – வங்க தேசத்திற்கு தப்பிச் சென்றவர் சரணடைவதாக அறிவிப்பு

அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ”இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளதை காவல்துறை பொறுப்பாக விசாரிக்காததும், கிராம கவுன்சில் அதை அலட்சியமாக கடந்து சென்றதும் தான் முகிம் அவருடைய கருத்தை ஃபேஸ்புக்கில் வெளிப்படுத்திய காரணம்” என்று  கூறியுள்ளார்.

அந்த பதிவு ”சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையால் வெளிப்பட்டது என்றும், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள் நோக்கமும் அதில் இல்லை” என முகிமின் வழக்கறிஞர் தன் வாதத்தை முன் வைத்துள்ளார்.

”கூடைபந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களின் பிரச்சனைகளை 1979 ஆம் வருடத்துடன் ( 1979-ல் மேகாலாயாவின் பூர்வகுடிகளான காசிகளுக்கும் மேகாலாயாவில் குடியேறிவர்களுக்கும் இடையே தொடர் வன்முறைகள் வெடித்துள்ளது) ஒப்பிட்டுப் பேசுவதே வகுப்புவாத கலவரத்தை தூண்டும் செயல் தான்” என அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இரு தரப்பின் வாதங்களையும் விசாரித்த நீதிபதி டியங்டோ முகிமின் பதிவு மேகாலயாவில் இணக்கமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் பழங்குடியினருக்கும் பழங்குடியினர் அல்லாதேருக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இருப்பதாக கூறியுள்ளார்.

”மேகாலயாவின் பூர்வகுடி மக்கள் இந்த மண்ணை சொந்தம் கொண்டாட எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை மேகாலயாவின் பழங்குடியினர் அல்லாத மக்களுக்கும் இருக்கும்பொழுது அவர்களுடைய சொந்த மாநிலத்திலேயே அவர்கள் அச்சத்துடன் இருப்பது போன்ற தோற்றத்தை முகிமின் பதிவு உருவாக்குகிறது” என நீதிபதி கூறியுள்ளார்.

சமூகத்தில் இருக்கும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதையும், அரசை அவமதித்திருப்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதி,  முகிம் தரப்பு கோரியபடி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய மறுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்கும் அமைப்பு இதை சுதந்திரமாக விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி டியங்டோ உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முகிம், கடந்த 2000-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடிமக்களுக்கான விருதான பத்மஸ்ரீயைப் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தகது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்