Aran Sei

பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்த செய்தி நிறுவனங்கள்

இந்தியாவில் உள்ள பதினோரு இணையச் செய்தி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, தற்போதுள்ள சூழ்நிலையில் செய்தியை மேம்படுத்த DIGIPUB என்கிற பெயரில் ஒரு செய்திக் குழுமத்தை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அதில் Alt News, Article 14, Boomlive, Cobrapost, HW News, Newsclick, Newslaundry, Scroll.in, The News Minute, The Quint and The Wire உள்ளிட்ட நிறுவனங்கள் ஒன்றிணைகின்றன .

இக்குழுமத்தின் முதல் தலைவராக நியூஸ் மினியுட் (news minute) -ன் தான்யா ராஜேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். துணைத்தலைவராக நியூஸ் கிளிக்-ன் பிரபிர் புருகயஸ்தாவும் பொதுச் செயலாளர்களாக தி குயிண்டின் ரித்து கபூர் மற்றும் நியூஸ் லாண்டரியின் அபிநாதன் சேகரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இக்குழுமம் தற்போதய சூழலைக் கணக்கில் கொண்டு இணையச் செய்தியை உலகத்தரத்தில் மேம்படுத்தவும் அதேவேளையில் சுதந்திரமாகச் செயல்படவும் திட்டமிட்டுள்ளது.

வணிகம், தொழிற்நுட்பம், வடிவமைப்பு போன்ற மரபுகள் எழுத்து இதழ்களில் பின்பற்றப்படுவதை அப்படியே இணைய இதழ்களில் பின்பற்றப்படவேண்டும் என்கிற அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர் .

“பணியாளர்கள் தொடங்கி பத்திரிகையாளர்கள் வரை, இணைய இதழ்களுக்குக் குறிப்பிட்ட அளவுகோல்கள் உள்ளன. இக்குழுமத்தால் ஊடகத்துறையில் சுதந்திரமான பத்திரிகையாளர்களைக் கொண்டுவர முடியும்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இன்றைய  சூழலில் ஒரு நிறுவனம் மட்டுமே இணைய ஊடகத்தின் குரலாக இருக்க முடியாது. சுதந்திரமான பத்திரிகையாளர்களின் பங்களிப்பைக் கட்டாயமாக இந்த இணைய ஊடகம் அடையாளம் கண்டுகொள்ளும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு குழுக்கள் இன்று இந்தியாவில் உள்ள  பல்வேறு இணைய ஊடகத்தைப்  பிரதிநித்துவப்படுத்துகின்றனர். டைம்ஸ் நவ் குழுமம், இந்தியா டுடே குழுமம், இந்துஸ்தான் டைம்ஸ், என்.டி.டி.வி மற்றும் லெஜெண்சி மீடியா ஹவுஸ் போன்றவை சேர்ந்து டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் என்கிற பெயரிலும் ரிபப்ளிக் டிவி, இந்தியா நியூஸ், ஒடிசா டிவி மற்றும் நியூஸ் எக்ஸ் இணைந்து இந்தியன் டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் (IDMA ) என்கிற பெயரிலும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இணைய ஊடகத்தை மோடி அரசு தணிக்கைக்கு உள்ளாக்கியபோது இந்தக் குழுமங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கிற சுதந்திரத்துக்கு உட்பட்டுத் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அதே சட்டத்திட்டங்கள் இணைய ஊடங்களுக்கும் பொருந்தும். மேலும் இந்தியத் தொழிற்நுட்பச் சட்டம் விதித்திருக்கிற விதிகளும் இவ் ஊடகங்களுக்குப் பொருந்தும். மற்ற குடியரசு நாடுகளில் தொலைக்காட்சிகளுக்கு இருப்பது போல் இணைய ஊடகங்களுக்கு அரசு அனுமதி, உரிமம் தொடர்பான சிக்கல்கள் போன்ற கடுமையான சட்ட விதிகள் இல்லை.

காலனிய காலத்தில் பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு படுத்தப்பட்டுப்  பத்திரிகையில் எழுதப்படும் அவதூறுகள் நிரூபிக்கப்பட்டால் அச்சட்டத்தின் கீழ்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், பல்வேறு இணையதளங்களின் மீது தொடுக்கப்படும் அவதூறு வழக்குகளால் வெளிப்படுவது என்னவென்றால் PRB சட்டமோ, அதற்கு நிகரான சட்டமோ இல்லாத நிலையிலும்,  இணையதள உரிமையாளர்கள் மீது பொறுப்பைச் சுமத்தும் பணியில் சுணக்கம் ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.

இணைய ஊடகம் அரசின் கீழ் கண்காணிக்கப்பட்டு ஒழுங்குப்படுத்தப்படுவது என்பது ஊடக சுதந்திரத்தை முடக்கும் முயற்சி என்ற ஊடகக் கண்காணிப்பு அமைப்புகளின் முறையீட்டை அரசு நிராகரிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்