Aran Sei

துப்புரவு பணியில் மனிதர்களை ஈடுபடுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – பேராசிரியர் லக்ஷ்மணன்

ழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வதில் இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் ஒரு ‘சுகாதார பாதுகாப்பு சவாலை’ விடுத்துள்ளது.

இந்தியாவில் சுமார் 62 கோடி பேர் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. திறந்த வெளியில் மலம் கழிப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுவதும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

அடிப்படை சுகாதார வசதியை மேம்படுத்தும் நோக்கோடு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி சர்வதேச கழிப்பறை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

காணொளி வழியாக நடைபெற்ற கழிப்பறை தின கூட்டத்தில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்துகொண்டுள்ளார். அப்போது, அவர் ‘சுகாதார பாதுகாப்பு சவாலை’ விடுத்துள்ளார். “பொது சுகாதாரத்தின் நலனுக்காக, தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும் வரை யாரும் கழிவு நீர் கலவையிலோ, கழிவு நீர் தொட்டியிலோ இறங்க கூடாது. இதை உறுதி செய்வதில் மத்திய அரசு தீர்க்கமாக உள்ளது” என்று ஹர்தீப் கூறியுள்ளார்.

‘அபாயகரமான துப்புரவு’ பணியில் ஈடுபடும்போது எந்தவொரு தொழிலாளியும் உயிரை இழக்கக் கூடாது எனும் நோக்கத்தோடு இந்தச் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர்கள், மாநில பணி இயக்குநர்கள் மற்றும் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள், 243 நகரங்களின் சார்பாக, 2021-ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் இயந்திரமயமாக்குவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இது குறித்து அரண்செய்யுடன் பேசிய எழுத்தாளரும் பேராசிரியருமான சி.லக்ஷ்மணன், “ஏப்ரல் மாதத்திற்குள் துப்புரவு பணியை இயந்திரமயமாக வேண்டும் என்று கூறியுள்ளது பாராட்டுக்குரிய ஒன்று தான். ஆனால், பலர் இதுவரை இதை சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். 1993-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்து இதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இது இன்னும் இயந்திரமயமாக்கப்படவில்லை” என்று கூறினார்.

“முழுமையாக இயந்திரமாக்க வேண்டும் என்றால் துப்புரவு தொழிலாளர்களை அப்பணியில் ஈடுபடுத்துபவர்களைக் கைது செய்ய வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக இத்தொழிலில் ஈடுபடுவோர் அடிநிலை சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சாதி மிக முக்கியமான வினைப்புரிகிறது என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் . எந்திரங்களை மட்டும் கொண்டுவந்தால் எந்த மாறுதலையும் ஏற்படுத்திட முடியாது.  கழுவுகளை அகற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாற்று பணிவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இப்படி செய்யும்போதுதான் நிலைத்த மாற்றங்கள் நிகழும்” என்றும் அவர் தெரிவித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்